பேருந்து, ரயில்களில் நிரம்பிய கூட்டம் - சென்னையில் இருந்து 9 லட்சம் பேர் பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கூடுதலாக 10,588 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினத்திலிருந்தே இப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ளபேருந்து நிலையங்களில் நேற்று கூட்டம் அலைமோதியது. பெரும்பாலானோர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். ஆனால், பேருந்து நிலையத்துக்கு வந்து பயணச்சீட்டு பெறுவோரிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பி அளிக்கச் செய்ததுடன், விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.

இதேபோல, தீபாவளியை முன்னிட்டு திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு மொத்தம் 38 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் மக்கள் குவிந்தனர். இதுவரை ரயில்களில் 3.42 லட்சம் பேர், அரசுப் பேருந்துகளில் 4 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 55 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர்.

மேலும், வேன்கள் மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் சென்னையில் இருந்து தீபாவளியைக் கொண்டாடச் சென்றனர். இதுவரை சுமார் 9 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாகவும், இந்த ஆண்டு சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE