ஈரோடு | தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல அலைமோதிய மக்கள்

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் மக்கள் தங்களது சொந்த ஊர் செல்ல குவிந்ததால் வழக்கத்தைக் காட்டிலும் கூட்டம் மிகுந்து காணப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான வெளி மாவட்ட மக்கள் குடும்பத்தினருடன் தங்கி விசைத்தறி உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு முதலே ஈரோடு பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவியத் தொடங்கினர். மக்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்வதற்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கமாக இயக்கும் பேருந்துகளைக் காட்டிலும் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் நேற்று முன்தினம் இரவு முதல் இயக்கப்பட்டன.

இதனால் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் மக்கள் சிரமம் இன்றி செல்ல ஏதுவாக இருந்தது. இதேபோல் நேற்று காலையும் ஈரோடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக கோவை, சேலம், கரூர், மதுரை பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதுபோல் ஈரோடு ரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. ஈரோடு ரயில்வே நுழைவு வாயில் பகுதியில் ஈரோடு ரயில்வே காவல் ஆய்வாளர் கிருஷ்ணா தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்கின்றனரா என தீவிர சோதனைக்குப்பின் ரயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே நேற்று காலை ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை உள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் மிகுதி காரணமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வழியாக திருச்சி, மதுரை போன்ற வெளியூர்களுக்குச் செல்ல வேண்டும். இதில் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு பைபாஸ் வழியாக வாகனங்கள் செல்ல முடியும். எனினும், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் நாமக்கல் நகரினுள் நுழைந்து வெளியேற வேண்டும்.

இதனால் நகரப் பகுதியில் வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் வாகனப் போக்குவரத்தை சீரமைத்தனர். ஈரோடு ரயில்வே நுழைவு வாயில் பகுதியில், பட்டாசுகளை கொண்டு செல்கின்றனரா என தீவிர சோதனைக்குப்பின் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE