தீபாவளி | சென்னையில் காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் காவல் துறை சார்பில் 18,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் செ சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம்:
- தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை ஆகிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- இந்த இடங்களில் 16 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் காவல் ஆளிநர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்
- தி.நகர் பகுதியில் 6 இடங்களில் சிறப்பு கேமராக்கள் பொருத்தி நேரலையாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தி.நகர் பகுதியில் 17 காவல் ஆளிநர்கள் தங்களது சீருடையில் Body worn கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது.
- தி.நகர், பூக்கடை பகுதியில் 3, வண்ணாரப்பேட்டை, எம்.சி. சாலையில் 4, புரசைவாக்கம் பகுதியில் 1 என்று 11 தற்காலிக கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- காவல் ஆளிநர்கள் ஒலி பெருக்கிகள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.
- தி.நகர், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதியில் 5 டிரோன்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
- பழைய குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதற்காக Face Recognition System (FRS) செயல மூலம் சுமார் 100 காவல் ஆளிநர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தி.நகர், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதிகளில் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
- தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதியில் 33 போக்குவரத்து இருசக்கர வாகனங்கள் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
- பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகளை திருடப்படாமல் தடுக்க கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக கட்டிக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது.
- தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதியில் 6 அகன்ற எல்இடி திரையின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாசகங்கள் ஒளிபரபப்பப்பட்டுவருகிறது.
- பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண்காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்-
- மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- கோயம்பேடு, மாதவரம் மற்றும் கே.கே.நகர் ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி. இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.