சென்னை: தமிழக மீனவர்கள் சுடப்பட்ட விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று எழுதிய கடிதத்தில், “10 மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர்) தங்களது விசைப்படகில் நடுக்கடலில் இன்று (அக்.21) மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, ஐ.என்.எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது.
இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது.
எனவே, நீங்கள் (பிரதமர் மோடி) இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
» நிர்வாகத்தில் ஆளுநர், பேரவைத் தலைவர் தலையீடு எதுவும் இல்லை: புதுச்சேரி முதல்வர்
» மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை: சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
இந்திய கடற்படை உத்தரவு: இந்தச் சம்பவம் குறித்து ராணுவ மக்கள் தொடர்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று இந்தியா - இலங்கை சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் இந்திய கடற்படை கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகத்திற்குரிய படகு ஒன்று காணப்பட்டது. பல முறை எச்சரித்தும் படகு நிற்கவில்லை.
வழிகாட்டு நெறிமுறைகள்படி, படகை நிறுத்த துப்பாக்கியால் சுடப்பட்டது. இதில் படகில் இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த நபருக்கு கப்பலில் முதலுதவி அளிக்கப்பட்டு, கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு கடற்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரின் உடல் நிலை சீராக உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
During the early hours of Oct 21, 2022, a suspicious boat was observed by the Indian Navy ship on patrol in Palk Bay near the India Sri Lanka International Maritime Boundary Line (IMBL). Despite repeated warnings the boat did not stop.
— Defence PRO Chennai (@Def_PRO_Chennai) October 21, 2022
முதல்வர் ரூ.2 லட்சம் அறிவிப்பு: இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்ட மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த காசிராஜன் என்பவரது மகன் மீனவர் வீரவேல், இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சம்பவத்தில் காயைமடைந்த வீரவேல், சிகிச்சைக்காக உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago