வேலூர்: இந்திக்கு அளிக்கும் முக்கியத் துவத்தை இந்தி பேசும் மக்களுக்கு அளிக்க வேண்டும் என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் யோசனை தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்ற செயல்பாடு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இதில், பாவேந்தர் பாரதிதாசன் மன்ற மாணவ பொறுப்பாளர்ளுக்கு அடையாள அட்டையை வழங்கி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, ‘‘நம் நாட்டில் இருக்கும் மொழி பிரச்சினையில் ஒன்றை மட்டும் சொல்கிறேன். 1946-ம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையில் மொழியை பற்றி ஒரு விவாதம் நடந்தபோது உ.பி.யில் இருந்த வந்த துலேக்கர் என்பவர் இந்தி பேசாதவர்கள் இந்தியர்கள் இல்லை என்றும், இந்தி பேசாதவர்கள் இந்த மன்றத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றார்.
அவருக்கு எதிர்ப்பு தெரிவத்தவர்கள் தென் மாநிலங்களைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி, கோபாலசாமி ஐயங்கார், ராமலிங்க செட்டியார், பேராசிரியர் என்.ஜி.ரங்கா, கிருஷ்ணாமூர்த்தி ஆகியோர் அடங்குவர். இதில், கிருஷ்ணமாச்சாரி பேசும்போது இந்தி பேசும் இந்தியா வேண்டுமா அல்லது முழு இந்தியா வேண்டுமா என்பதை இந்தி பேசுபவர்களே முடிவெடுக்கலாம் என்றார். அதை இப்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.
» அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழகம் 3-ம் இடம்: பிரதமரிடம் விருது பெற்ற அமைச்சர்
» பரந்தூர் விமான நிலையத்தால் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
1968-ம் ஆண்டு நான் நாடாளுமன்றத்தில் இருந்தபோது ஆட்சிமொழி தீர்மானம் நிறைவேறியது. அதில், இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழியுடன் ஆங்கிலம், இந்தி கற்றுக்கொடுக்கப்படும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி,ஆங்கிலத்துடன் நவீன தென்னிந்திய மொழி கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்கள். தமிழகத்தில் உலக பொது மொழியான ஆங்கிலத்துடன் இருமொழி கொள்கை கடைபிடிக்கப்படுகிறது.
இந்திக்கு அளிக்கும் முக்கியத் துவத்தை இந்தி பேசும் மக்களுக்கு அளிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். கல்வி, பொருளாதாரம் இரண்டிலும் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் இந்தி பேசும் பெரிய மாநிலங்கள் தான். அவர்கள் தென்நாட்டை எட்டிப்பிடிக்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகும். அவர்களை முன்னேற்ற கல்வியறிவு அளிக்க வேண்டும். 1968-ம் ஆண்டின் ஆட்சிமொழி தீர்மானத்தை செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.
கீழடி அகழாய்வு: இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உலக தமிழர் பேரவை நிறுவனர் பழ.நெடுமாறன் பேசும் போது, ‘‘திருவள்ளுவரும், தொல்காப்பியரும் அன்று எந்த மொழியில் பேசி, எழுதினார்களோ அந்த மொழியில் நாம் இன்று பேசி, எழுதி வருகிறோம். இது தமிழுக்கு உள்ள சிறப்பு. சிற்சில எழுத்து மாற்றங்கள் காலப்போக்குக்கு ஏற்ப மாறியதே தவிர அடிப்படை சிறிதளவும் மாறவில்லை. கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 6-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மொழி தமிழ் என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது.
உலக கண்ணோட்டம் எப்படி தமிழனுக்கு வந்தது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உணர்ந்து உலகின் எந்த நாடாக இருந்தாலும் என் நாடு, எந்த இனமாக இருந்தாலும் அவன் நம் இனம் என்று சொந்தம் கொண்டாடிய இனம் தமிழினம். நாம் ஒன்று பட்டால் நமக்கு மட்டும் வாழ்வல்ல. நம்மை நம்பியுள்ள உலகமெல்லாம் வாழும் தமிழர்கள் அனைவரும் கட்சி, ஜாதி, மத பேதங்களை மறந்து ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago