சென்னை: "உழவர்களை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. காப்பீட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி, பருவம் தவறிய மழையால் உழவர்களுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு எவ்வளவோ, அதை இழப்பீடாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இழப்பீடு உழவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பாதிக்கப்பட்ட உழவர்களில் 90 விழுக்காட்டினருக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், மற்றவர்களுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது அநீதியானது.
தமிழ்நாட்டில் குறுவை பருவ நெற்பயிர்களுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீடு செய்யப்படுவதில்லை. சம்பா பயிர்களுக்கு மட்டும் தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சம்பா நெற்பயிருக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காப்பீடு பெற்றிருந்ததனர். சம்பா பருவத்தில் பெய்த பெருமழையில் பெரும்பான்மையான பயிர்கள் சேதமடைந்த நிலையில், அவற்றுக்கு உரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் தரவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
எடுத்துக்காட்டாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 856 கிராமங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. அனைத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்திருந்தனர். ஆனால், அவர்களில் 7 கிராமங்களைச் சேர்ந்த உழவர்களுக்கு மட்டும் தான் மிகக்குறைந்த தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 849 கிராமங்களைச் சேர்ந்த உழவர்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.
» தனி நபர்களைக் கொண்டு செப்டிக் டேங், கழிவுநீர் பாதை சுத்தம் செய்வது சட்ட விரோதம்: சென்னை மாநகராட்சி
» T20 WC | அஃப்ரிடி வீசிய யார்க்கர்; ஆப்கன் வீரரின் பாதத்தை பதம் பார்த்த பந்து
கடலூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 683 கிராமங்களில் சம்பா பயிருக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அவற்றில் 279 கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 10% கிராமங்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 90% கிராமங்களுக்கும், உழவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. வெறும் 10% உழவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டாலும் கூட, அது யானைப் பசிக்கு சோளப்பொறியாகவே உள்ளது. இதனால் உழவர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.
மழை, வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும் போது, அதனால் உழவர்களுக்கு இழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகத் தான் காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் காப்பீட்டு நிறுவனங்கள் தான் உழவர்களுக்கு ஆபத்பாந்தவன்கள் ஆகும். ஆனால், ஆபத்தில் உதவ வேண்டிய காப்பீட்டு நிறுவனங்கள், அதற்கு மாறாக உழவர்களை சுரண்டுகின்றன. காப்பீட்டு நிறுவனங்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டை புள்ளிவிவரங்களின் மூலம் துல்லியமாக நிரூபிக்க முடியும்.
சம்பா பருவத்தில் நெற்பயிர் மற்றும் சிறப்புப் பயிர்களுக்காக தமிழக அரசின் சார்பில் காப்பீட்டுக் கட்டண மானியமாக செலுத்தப்பட்ட தொகை மட்டும் ரூ.1,338.89 கோடி ஆகும். உழவர்கள் சார்பில் பிரீமியமாக செலுத்தப்பட்ட தொகை சுமார் ரூ.225 கோடி. ஒட்டுமொத்தமாக உழவர்களிடமிருந்தும், அரசிடமிருந்தும் பிரீமியமாக ரூ.1,500 கோடிக்கும் கூடுதலாக வசூலித்த காப்பீட்டு நிறுவனங்கள், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக ரூ.481 கோடி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது.
உழவர்களைப் பொறுத்தவரையில் ஒரு ஏக்கர் சம்பா நெற்பயிரை சுமார் ரூ.32,500-க்கு காப்பீடு செய்கின்றனர். அதற்காக அரசும், உழவர்களும் சேர்ந்து 10% தொகையை பிரீமியமாக செலுத்துகின்றனர். முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30,000 இழப்பீடாக வழங்கப் பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களின் சர்வே எண் அடிப்படையில் ரூ.35, ரூ.50, ரூ.66, ரூ.88 என்ற அளவில் தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உழவர்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பாதிப்பு இல்லாத காலங்களில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிரீமியத் தொகை லாபமாக கிடைக்கும். பாதிப்பு ஏற்படும் காலங்களில் காப்பீடு நிறுவனங்களுக்கு இழப்பு தான் ஏற்படும். இது தான் காப்பீட்டின் தத்துவம் ஆகும். ஆனால், பாதிப்பு காலத்திலும் அரசும், உழவர்களும் செலுத்திய பிரீமியத் தொகையில் பெரும்பகுதியை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டியுள்ளன. இவ்வாறு சுரண்டுவதற்கு ஏற்ற வகையில் தான் பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு நிர்ணய கொள்கையை வகுத்துள்ளன.
உழவர்களை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. காப்பீட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி, பருவம் தவறிய மழையால் உழவர்களுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு எவ்வளவோ, அதை இழப்பீடாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago