இரவில் திறந்திருக்கும் கடைகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது: போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவில் நீண்ட நேரம் திறந்திருக்கும் கடைகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என போலீஸாருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடை களில் கூட்டம் அலைமோதி வருகிறது. சென்னையில் முக்கிய வர்த்தக பகுதிகளில் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்காக இரவு நீண்ட நேரம் திறந்திருக்கும் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மாறாக எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம்: தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்காக இரவு நேரங்களில் திறந்திருக்கும் கடைகளின் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று ஏற்கெனவே உத்தரவு உள்ளது. அதை அனைத்து போலீஸாரும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவில் டிஜிபி குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சுற்றுச் சூழலுக்கு உகந்த வேதியியல் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். அதேபோல உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு நிர்ணயித்துள்ள பட்டாசு வெடிக்கும் நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகிய பகுதிகளில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை எனவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE