இந்தி திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த தமிழர்கள் தயங்கமாட்டார்கள்: கனிமொழி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தமிழர்கள் தயங்கமாட்டார்கள் என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய வரலாற்றுத்துறை சார்பில் பேராசிரியர் அ.கருணானந்தனின் பெரியாரியல் அறக்கட்டளைச் சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. இதில் திமுக எம்.பி கனிமொழி, தமிழக அரசின் சமூகநீதி கண்காணிப்பு குழுத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்வில் கனிமொழி பேசியதாவது: இந்த காலகட்டத்தில் பெரியார், அம்பேத்கரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரியாரின் பெயரை கேட்டாலே பலருக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. பள்ளிக்கூடங்களில் நாம் எதை தாண்டி வந்துள்ளோம் எத்தகைய போராட்டங்களை கடந்து வந்துள்ளோம் என மாணவர்களுக்கு சொல்லித் தராததால், இடஒதுக்கீடு, சமூக நீதியால் வளர்ந்த மாணவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுகின்றனர். சமூகநீதி, இடஒதுக்கீடு மூலம் வளர்ந்த சில தலைவர்கள்கூட அதை உணர்வதில்லை. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் மீண்டும் இந்தி திணிப்பை முதன்மையாக எதிர்க்கும் நிலையில் உள்ளோம். மொழிக்கான போராட்டம் நீர்த்துபோகவில்லை. மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தை உலகம் மறந்திருக்காது, மீண்டும் அப்படி ஒரு போராட்டத்தை நடத்தவும் தமிழர்கள் தயங்கமாட்டார்கள். அந்த நிலையை ஏற்படுத்திவிட வேண்டாம்.

சுப.வீரபாண்டியன் பேசியதாவது: பெரியார் எப்போது தனிப்பட்ட முறையில் யாரையும் எதிரியாக கருதவில்லை. ராஜாஜிக்கும் பெரியாருக்கும் இடையிலான நட்புதனிப்பட்ட ரீதியிலானது, அவர்களுக்குள்ளான சண்டை கொள்கை அடிப்படையிலானது. அவர் தனக்கு செலவு செய்யும்போது கஞ்சனாகவும், சமூகத்துக்கு செலவு செய்யும்போது வள்ளலாகவும் திகழ்ந்தார். இவ்வாறு அவர்கள் பேசினர். நிகழ்வில், பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி, இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ்.எஸ்.சுந்தரம், முன்னாள் பேராசிரியர் அ.கருணானந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறும்போது, "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE