சென்னை: தீபாவளி விற்பனை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கூட்ட நெரிசலில் ஊடுருவும் சீசன் திருடர்களுக்கு 'முக அடையாள கேமரா' மூலம் போலீஸார் வலை விரித்துள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டட்ரோன் மூலமும் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு தியாகராயநகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, திருவான்மியூர், பெரம்பூர் உட்பட முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் புத்தாடை வாங்கவும், வீட்டுக்குத் தேவையான பொருட்களைத் தேர்வு செய்யவும் சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நெரிசலைப் பயன்படுத்தி ஜேப் படி, வழிப்பறி திருடர்கள் புகுந்து கைவரிசை காட்டும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறும். அண்மையில் கூட தியாகராயநகர், ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபலமான ஜவுளிக்கடை ஒன்றில் பெண்கள் பிரிவில் புடவை எடுத்துக் கொண்டிருந்த ஆவடி, கோவிந்தராஜபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் மணிபர்ஸ் திருடப்பட்டது. இத்திருட்டில் ஈடுபட்ட குன்றத்தூர் பாலாஜி நகரைச்சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை மாம்பலம் போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். இவர் மேலும் 2 பேரிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
இதுபோன்ற திருடர்கள் மற்றும் சீசன் திருடர்களைப் பிடிக்க கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்றத்தடுப்பு நடைமுறைகளை கடைபிடித்து போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். கடை வீதிகள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த பகுதிகளில் ஏற்கெனவே உள்ள கண்காணிப்பு கேமராக்களை தவிர கூடுதலாக கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தொலைநோக்கு கருவி மூலமும் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை காவல் கூடுதல் ஆணையர் (தென் சென்னை) பிரேம் ஆனந்த் சின்ஹா கூறும்போது, "திருட்டு, ஜேப்படி உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இதற்காக நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாகப் பொருத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக மக்கள் அதிகளவில் திரளும் தியாகராயநகர், பாண்டிபஜாரில் 4 உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோக இந்த ஆண்டு இங்கு முதல்முறையாக 6 அடி உயரம் கொண்ட தாழ்வான கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மேலும் தெளிவாக கண்காணிக்க முடியும். இந்த பகுதியில் ஏற்கெனவே 220 கேமராக்கள் உள்ள நிலையில் கூடுதலாக 80 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் புகுந்து கைவரிசை காட்டும் திருடர்கள், சீசன் திருடர்களைப் பிடிக்க முக அடையாளத்தைக் கொண்டு அடையாளம் காணும் நவீன (எஃப்ஆர்எஸ்) கேமராக்கள் 10 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஏற்கெனவே காவல் நிலையங்களில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படத்துடன் பொருந்தும் முக அடையாளங்கள் கொண்ட நபர் கூட்டத்தில் வந்தால் அதுகுறித்து காவலர்களுக்கு தெரிவிக்கும். இதுதவிர 2 ட்ரோன் கேமராக்கள், போலீஸாரின் சீருடையில் கேமராக்கள் ஆகியவை மூலம் கண்காணித்து வருகிறோம். இதேபோன்ற நடவடிக்கை சென்னை மற்றும் புறநகர் முழுவதும் நடைபெற்று வருகிறது" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago