“இரண்டு திராவிட கட்சிகளிடம் இருந்தும் தமிழகம் விடுபட வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு”, “தற்போது அமைச்சர்களால் தன்னால் தூங்க முடியவில்லை என்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், ஜெயலலிதா காலத்தில் அமைச்சர்களால்தான் தூங்க முடிந்ததில்லை”, “எல்லாருக்குமான கட்சியாக பாஜக இருக்கிறதா என்ற கேள்வி வரும்போது, அதன் வளர்ச்சி குறித்து நாம் நிரம்ப யோசிக்க வேண்டியிருக்கிறது.”, “ராகுல் காந்தியின் யாத்திரை ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.”... - இப்படி சமகால அரசியல் சார்ந்து தெறிப்புக் கருத்துகளை உதிர்க்கிறார் தமிழருவி மணியன். ‘காமராஜர் மக்கள் கட்சி’ எனும் புதிய அரசியல் கட்சியை நிறுவி இருக்கும் மூத்த அரசியல் ஆளுமை தமிழருவி மணியன் 'இந்து தமிழ் திசை' டிஜிட்டலுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்...
எங்கள் மூச்சு, காமராஜர் ஆட்சி என்ற முழக்கத்துடன் காமராஜர் மக்கள் கட்சியை தொடங்கி இருக்கிறீர்கள். காமராஜர் மக்கள் கட்சியை ஆளும் கட்சியாக மாற்றுவதற்கான வியூகம் குறித்து சொல்லுங்க?
“இன்றைக்கு இருக்கும் அரசியல் என்பது ஒரு பக்கம் வெறுப்பரசியல். மற்றொரு பக்கம் பண அரசியல். அதற்காகத்தான் அரசியல் அற்ற அரசியலை செய்வதற்காக இந்த கட்சியை தொடங்கி இருக்கிறேன். ஒரு கட்சி இன்னொரு கட்சியை விமர்சிப்பது என்பது நான் அரசியலுக்கு வந்தபோது ஆரோக்கியமாக இருந்தது. இன்று அது தனிமனித தாக்குதலாக தரம் தாழ்ந்துவிட்டது. மற்றொன்று, ஊராட்சித் தேர்தலிலேயே கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
இவ்வாறு வெறுப்பு அரசியலும் பண அரசியலும் தொடருமானால் தமிழகத்தின் பொதுவாழ்வு பண்பு நலன்கள் அனைத்தும் பாழ்பட்டுப் போகும். எனவே, இவற்றில் இருந்து தமிழகம் விடுபடுவதற்கு ஒரு மாற்றுப் பாதை தேவை. அதற்காகத்தான் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கிறேன். அதற்காக பலரையும் நான் முன்னிலைப்படுத்தி இயங்கி இருக்கிறேன். ஆனால், அந்த முயற்சிகள் சரிவரவில்லை. நான் யாரை முன்னிலைப்படுத்துகிறேனோ அவர்கள் போர் குணத்தோடு சமூக மாற்றத்தை ஏற்படுத்தியாக வேண்டும் என்ற முனைப்போடு இறுதிவரை பயணிக்கத் தயாராக இல்லை. எனவே, என்னை நானே மையப்படுத்திக் கொண்டு இந்த அரசியலை மேற்கொண்டு வருகிறேன்.
» போதை தரும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்தால் உரிமம் ரத்து: தமிழக அரசு
கட்சியின் அடிப்படைக் கட்டுமானத்தை வலுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தகுதிவாய்ந்த தன்னலமற்ற தலைவரை தேர்வு செய்வதற்கான முனைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு தொகுதியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், அந்த தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்; தொகுதி மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்க வேண்டும். போராட்டங்களை நடத்துவதற்கு மாற்றாக சேவைப்பணிகளில் ஈடுபட வேண்டும். 2026ல் வர இருக்கிற சட்டமன்றத் தேர்தல்தான் எங்கள் இலக்கு. இந்த இடைப்பட்ட காலத்தில் தொகுதி தலைவர்கள், மக்களின் மனங்களை வெல்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதற்காக தொகுதி தலைவர்களுக்கு பாடம் நடத்தும் பணியைத்தான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன்.”
அப்படி என்றால், எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் மக்கள் கட்சி போட்டியிடாதா?
“தற்போது எதையும் அறுதியிட்டு இறுதியாகச் சொல்ல இயலாது. சூழல் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.”
தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா அல்லது தனித்தா?
“இரண்டு திராவிட கட்சிகளிடம் இருந்தும் தமிழகம் விடுபட வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. ஏனெனில், இரண்டு திராவிட கட்சிகளுக்கும் தமிழர் நலன் குறித்து எந்த சிந்தனையும் கிடையாது. தங்கள் சொந்த குடும்பங்களை வளப்படுத்திக்கொள்வதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் இவர்கள். மக்கள் நலனுக்காக இவர்கள் வரவில்லை. எடப்பாடி பழனிசாமி ஊழலற்ற ஆட்சியை அளித்தார் என்று கூற முடியுமா? அதேபோல், தற்போதைய ஸ்டாலின் அரசு ஊழலின் நிழல்படியாத அரசு என கூற முடியுமா? நிச்சயம் முடியாது. எப்படி ஒரு சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகள் அது சாகும்வரை மறைவதில்லையோ அதுபோல், இந்த இரண்டு திராவிடக் கட்சிகளில் இருப்பவர்களிடம் ஊழலற்ற நல்ல நிர்வாகத்தை நம்மால் பார்க்கவே முடியாது. எனவே, இந்த இரண்டு திராவிட கட்சிகளோடு இணக்கம் கொள்பவர்களோடு எங்களுக்கு இணக்கம் இல்லை. எனவே, நாங்கள் கூட்டணி அமைப்பதாக இருந்தால் அது இரண்டு திராவிட கட்சிகளோடும் கூட்டணி அமைக்காதவர்களுடன்தான் இருக்கும்.”
அப்படியானால், திமுகவும் அதிமுகவும்தான் உங்களின் அரசியல் எதிரிகளா?
“ஆம். கருத்தளவில்தான் இவர்களை எதிரிகளாகப் பார்க்கிறோம். எந்த தனி மனிதரையும் எதிரியாகப் பார்ப்பதில்லை.”
திராவிட மாடல் என்ற சொல் இந்திய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், திராவிட மாடல் அரசு மிகச் சிறந்த ஆட்சியை வழங்கிக்கொண்டிருக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். திமுகவின் ஒன்றரை ஆண்டு கால ஆட்சியை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்?
“இந்த திராவிட மாடலின் தாக்கத்தை கேரளாவிலோ, ஆந்திராவிலோ நீங்கள் பார்க்கிறீர்களா? வட இந்தியாவை விட்டுவிடுங்கள். திராவிடம் என்பதே தென்னிந்தியாதானே. எந்த தென்னிந்திய மாநில ஆட்சியாளர்களாவது இந்த திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாங்களும் வழங்க விரும்புகிறோம் என்று சொன்னார்களா? சொந்த குழந்தையை சீராட்டி பாராட்டுவதுபோல அவர்கள் சொல்லிக்கொள்ளும் திராவிட மாடலை அவர்களே பாராட்டிக்கொள்கிறார்கள். எந்த மாடல் என்ற பெயர் முக்கியமல்ல. ஒரு ஆட்சி, ஊழலின் நிழல் படியாததாக இருக்க வேண்டும். அமைச்சர்கள் அனைவரும் கடைசிவரை கை சுத்தமானவர்களாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு முன்னேற்றத்தைத் தரும் ஆட்சி எந்த பெயரில் இருந்தாலும் அதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், தற்போது இருக்கும் ஆட்சி அப்படி இருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.”
திமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் சிலர் புதுப்புது பிரச்னைகளை உருவாக்கி தன்னை தூங்கவிடாமல் செய்துவிடுவதாகவும், அவர்களின் செயல்களால் திமுக பழிகளுக்கும் ஏளனத்துக்கும் ஆளானது என்றும் ஸ்டாலின் கூறி இருக்கிறார். திமுகவினரை ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற விமர்சனத்தை இது ஏற்படுத்தி இருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
“இந்த விமர்சனம் உண்மையானது. ஏனெனில், தலைமைத்துவம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஜெயலலிதா உதாரணம். அவர் கீழே இருந்தவர்கள் அனைவரும் தவறானவர்கள்தான். ஆனால், அவர்கள் தனது விரல் அசைவுக்கும் விழி அசைவுக்கும் ஏற்ப செயல்படக்கூடியவர்களாக வைத்திருந்தார். தற்போது அமைச்சர்களால் தன்னால் தூங்க முடியவில்லை என்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், ஜெயலலிதா காலத்தில் அமைச்சர்களால்தான் தூங்க முடிந்ததில்லை. நாளை நாம் அமைச்சர்களாக இருப்போமா மாட்டோமா என்ற நினைப்போடுதான் அவர்கள் தூங்கவே சென்றார்கள்.
தமிழ்நாட்டில் பயங்கராவாதிகளால் எனக்கு தூக்கம் கெடுகிறது, திமுகவை வேரருக்க நினைக்கும் சக்திகளால் எனக்கு தூக்கம் கெடுகிறது என முதல்வர் ஸ்டாலின் சொன்னால் அது எனக்கு புரியும். தன் சொந்த கட்சியினராலும், சொந்த அமைச்சர்களாலும் தூக்கம் கெடுகிறது என்று சொன்னால், அவர்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள இயலவில்லை என அவர் சொல்கிறார் என்று அர்த்தம்.”
இந்தியை திணிக்க மத்திய அரசு முயல்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். அக்கட்சியின் இளைஞரணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன?
“1965ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவன் நான். அப்போது, அரசியல் தலைவர்கள் மீது மாணவர்களுக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. தற்போது, அதுபோன்ற மதிப்பு கிடையாது. இந்தியை எதிர்ப்பதாகக் கூறும் இவர்களே தாங்கள் நடத்தும் பள்ளிகள் மூலம் இந்தியை கற்பிக்கிறார்கள். திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக மட்டும்தான் இருந்தது. மற்ற பாடங்கள் அனைத்தும் தமிழில்தான் கற்பிக்கப்பட்டன. ஆனால், இவர்கள் இந்தியை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு தமிழை அழித்துவிட்டு ஆங்கிலத்தை வளர்த்தவர்கள்.
ஆங்கிலேயன் 1947-லேயே நாட்டைவிட்டு சென்றுவிட்டான். ஆனால், இவர்கள் இன்னமும் ஆங்கிலத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான் என வளர்ந்த நாடுகள் பலவும் தங்கள் சொந்த மொழியில்தான் கல்வியை வழங்குகிறார்கள். ஆனால், தாய்மொழி வழிக் கல்வியை வழங்கத் தவறியவர்கள் இவர்கள். ஆட்சி மீது உள்ள அதிருப்தியை திசை மாற்றுவதற்காக இவர்கள் இந்தி எதிர்ப்பை கையில் எடுக்கிறார்கள். என்னதான் இவர்கள் ஊதி பெரிதாக்க முயன்றாலும், இவர்களால் ஒருபோதும் 1965ல் நடந்ததுபோன்ற ஒரு போராட்டத்தை கொண்டு வர முடியாது.”
அதிமுக வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறதா?
“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படத்தைக் கொண்டுதான் எடப்பாடி பழனிசாமியோ, ஓ. பன்னீர்செல்வமோ தேர்தலில் வாக்குகளைப் பெற முடியும். அப்படி இருக்கும்போது இவர்களில் யார் மக்கள் தலைவர்? யாருமே இல்லை. ஒருவருக்கு ஒருவர் எதிராக நின்று அதிமுக எனும் மாளிகையின் செங்கல்லை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் உருவிக்கொண்டே இருக்கிறார்கள். இதன் விளைவு ஒரு நாள் கட்டடமே காணாமல் போகும்.”
திமுக, தனது முதல் எதிரியாக பாஜகவைத்தான் பார்க்கிறது; பாஜகவின் முதல் எதிரி திமுகதான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். அதிமுகவின் இடத்தை பாஜக எந்த அளவு பிடித்திருப்பதாகக் கருதுகிறீர்கள்?
“அதிமுகவின் வலிமையை பாஜக விரைவில் பெற்றுவிடும் என்று சொல்ல முடியாது. திமுக எதிர்ப்புதான் அதிமுக உயிர்வாழக் காரணம். அதேபோல், அதிமுக இல்லை என்றால், அனைத்து தவறுகளுக்கும் திமுகவே காரணம் என்றாகிவிடும். அதிமுக சிதைகிறது என வைத்துக்கொண்டால், எடப்பாடி பழனிசாமியையோ, ஓ. பன்னீர் செல்வத்தையோ நம்பி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற அவநம்பிக்கை அதிமுக தொண்டர்களுக்கு வந்துவிட்டால் அவர்கள் திமுக பக்கம் செல்ல மாட்டார்கள். காங்கிரஸ் பக்கமும் செல்ல மாட்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இயல்பாக இடம் மாற்றம் வேண்டும் எனும் நிலையில் பாஜகவை நோக்கித்தான் செல்வார்கள்.”
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிதான் மு.க.ஸ்டாலினின் தூக்கத்தைக் கெடுப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார் . தமிழ்நாட்டில் பாஜக அந்த அளவுக்கு வளர்ந்து வருகிறதா? பாஜக வளருமானால் அது தமிழகத்திற்கு எத்தகைய சாதக பாதகங்களை ஏற்படுத்தும்?
“திமுக அரசியலை வீழ்த்த வேண்டும், அக்கட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நினைப்பில் இயங்குகிற வகையில் அக்கட்சிக்கான சாதகமான சூழலை என்னால் பார்க்க முடியும். ஆனால், எல்லாருக்குமான கட்சியாக அது இருக்கிறதா என்ற கேள்வி வரும்போது, அதன் வளர்ச்சி குறித்து நாம் நிரம்ப யோசிக்க வேண்டியிருக்கிறது.”
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து...
“நேரு - காந்தி குடும்பத்தின் செல்வாக்குக்கு உட்படாத தலைவராகவா மல்லிகார்ஜுன கார்கே இருந்துவிடப் போகிறார். உண்மையில் அக்கட்சிக்கு புத்துணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நினைப்பு இருந்திருந்தால், சசி தரூர்தான் ஆதரிக்கப்பட்டிருக்க வேண்டும். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் சொல்வதை செய்வதற்காகவே கார்கே ஆதரிக்கப்பட்டிருக்கிறார்.”
ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை, தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
“ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடங்கும்போது ஊடகங்கள் பெரிய செய்தியாக வெளியிட்டன. ஆனால், அது தற்போது பெட்டிச் செய்தியாகிவிட்டது. 1980-ல் ஜனதா கட்சியின் ஆட்சி வீழ்ச்சி அடைந்த பிறகு அதை புத்தாக்கம் செய்வதற்காக கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை சந்திரசேகர் நடைபயணம் செய்தார். அவரது பாத யாத்திரையால் ஜனதா கட்சிக்கு ஒரு விழுக்காடு கூட நன்மை விளையவில்லை. அதுபோல்தான் ராகுல் காந்தி யாத்திரையாலும் ஒரு நன்மையும் விளையாது.”
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் தேசிய அளவில் எவ்வாறு இருக்கும்? எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக இருக்குமா? மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு யாருக்கு கிட்டும்?
“எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு கொடியின் கீழ் இருந்தால் மோடியை வீழ்த்த முடியும். ஏனெனில், அவரது கட்சி 50 விழுக்கடோ 60 விழுக்காடோ பெற்று ஆட்சிக்கு வரவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. காங்கிரசை மையப்படுத்தி அணி அமைக்க வேண்டும் என்பவர்கள் ஒருபுறமும், காங்கிரசை தள்ளிவைத்துவிட்டு அணி அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மறுபுறமுமாக எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் சேருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அமையாது என்பது எனது பரிபூர்ண நம்பிக்கை. ஏனெனில், இவர்கள் தங்கள் சுயநலனுக்காகத்தான் இயங்குகிறார்களே தவிர பொது நலக்காக அல்ல.”
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago