பள்ளிக் கட்டிடத்தில் விழும் அபாய நிலையில் ஜன்னல்கள்: நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளி ஒன்றில் விழும் நிலையில் உள்ள ஜன்னல் கதவுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதிகள் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் சேதமடைந்த கட்டிடங்கள் விழுந்து விபத்துகள் உள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. இதில், ஒரு சில விபத்துகளில் மரணங்களும் பதிவாகிறது. குறிப்பாக பள்ளிக் கட்டிடங்கள் விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, பள்ளிகளில் முற்றிலும் வலுவிழந்த பள்ளிக் கட்டிடங்களை முன்கூட்டியே கள ஆய்வு செய்து அவற்றை அகற்றவும், திறந்த நிலை கிணறுகள், நீர்நிலை தொட்டிகளையும் மூடவும், மின் இணைப்பு சரியாக உள்ளதை உறுதிப்படுத்தவும், தண்ணீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

ஆனால், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் ஓட்டேரி, கொசப்பேட்டை, படவட்டம்மன் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் சென்னை உயர் நிலைப்பள்ளி கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது. ஜன்னலில் கதவு ஒன்று பாதி சேதமடைந்து கிழே விழும் நிலையில் உள்ளது. மேலும், 2 ஜன்னல்களை சுற்றியுள்ள பகுதி பகுதிகளில் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதைத் தவிர்த்து பள்ளியின் பெயர் பலகையும் சேதம் அடைந்துள்ளது.

ஆனால், இந்தப் பள்ளிக் கட்டிடத்தில் அமர்ந்துதான் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக, சில நாட்களில் பருவமழை தொடங்க உள்ளது. பருவமழை காலத்தில் புயல் அடித்தால் இந்த ஜன்னல் கதவுகள், பெயர் பலகை அந்த வழியாக செல்பவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தப் பள்ளி கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE