தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | அப்போதைய ஆட்சியர், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும்: வைகோ

By செய்திப்பிரிவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அப்போதைய ஆட்சியர், காவல்துறையினர் ஆகியோர் மீது விசாரணை ஆணையம் பரிந்துரைத்தவாறு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தின் 100ஆவது நாளான 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி அன்று பொதுமக்கள் அணி திரண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதி வழியில் பேரணி நடத்தியபோது, திட்டமிட்டு வன்முறை ஏவப்பட்டது.

அதன் காரணமாக தூண்டிவிடப்பட்ட கலவரத்தை அடக்குவதாக பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ரஞ்சித்குமார், கிளாஸ்டன், கந்தையா, தமிழரசன், சண்முகம், மாணவி ஸ்னோலின், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், கார்த்திக், ஜான்சி, செல்வசேகர், காளியப்பன், ஜெயராமன் ஆகிய 13 பேர் பலியானார்கள்.

இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆணையம் வழங்கிய அறிக்கை, நேற்று (18 அக்டோபர்2022) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடியை ஜாலியன் வாலாபாக் ஆக மாற்றிய அன்றைய அதிமுக அரசின் அராஜகத்தைக் கண்டித்தும், துப்பாக்கிச் சூட்டிற்கு நீதி வேண்டும்;

அறவழியில் போராடிய மக்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்தன. வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமி அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மே 22ம் தேதி அன்று இரவு படுகொலை செய்யப்பட்டோரின் இல்லங்களுக்கு நான் நேரில் சென்று ஆறுதல் கூறினேன். காயம்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களையும் சந்தித்து ஆறுதல் சொன்னேன்.

அமைதியாகச் சென்ற மக்கள் பேரணியை சீர்குலைப்பதற்காகவே, காவல்துறையால் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதையும், காவல்துறையில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்களைத் தேர்வு செய்து, குறிபார்த்து சுட்டுக் கொன்றார்கள் என்பதையும், அங்கே நேரில் சென்றபோது பத்திரிகை ஊடகங்களில் நான் தெரிவித்தேன்.

தற்போது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் அதே கருத்தைத் தனது விசாரணை அறிக்கையில் கூறி இருக்கிறது. துப்பாக்கிச் சூடு நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது, பெரியார் மொழியில் கூறினால் சமுக்காளத்தில் வடி கட்டியப் பொய் என்பதை விசாரணை ஆணையத்தின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.

அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்த அனைத்து விபரங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்துக்கு நிமிடம் தெரிவித்து வந்துள்ளனர் என்று ஆணையம் கூறி இருக்கிறது.

எனவே தூத்துக்குடி படுகொலைகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டியவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் ஐயமில்லை. சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் அபாயகரமான துப்பாக்கியால் 17 சுற்றுகள் சுட்டுள்ளார். அவரை 4 இடங்களில் வைத்து சுடச் செய்துள்ளதன் மூலம், காவல்துறை அவரை அடியாள் போல் பயன்படுத்தி உள்ளது;

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி உள்ளனர்; துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் பின்னந்தலை மற்றும் முதுகு பகுதியின் வழியாக குண்டு துளைத்து, முன் வழியாக உள்ளுறுப்பைச் சிதைத்து வெளியே வந்திருக்கிறது.

இடுப்புக்குக் கீழே யாரையும் சுடவில்லை. துப்பாக்கிச் சூடு நடைபெறும்போது, கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் பின்பற்றப்படவில்லை. காவல்துறையினர் வரம்பு மீறியும், அத்துமீறியும் செயல்பட்டிருக்கிறார்கள் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் உண்மைகளை வெளிக்கொணர்ந்து இருக்கிறது. விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மீது விசாரணை ஆணையம் பரிந்துரைத்தவாறு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று வைகோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்