சென்னை: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு அரசியல் செய்கிறார். இது அநீதி. ஓபிஎஸ்ஸை பி டீமாக பயன்படுத்தி அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் திட்டமிடுகிறார். அது நடக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளைக் கண்டித்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
ஸ்டாலின் கனவு பலிக்காது: அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைக்கு அனுமதி கோரினோம். அது தொடர்பான உச்ச நீதிமன்ற ஆதாரங்களை சபாநாயகருக்கு நாங்கள் முறைப்படி அனுப்பிவைத்தோம். அந்த கோரிக்கை மீதான முடிவை சபாநாயகர் இரண்டு மாதங்கள் கிடப்பில் போட்டார். இது ஜனநாயகப் படுகொலை. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை நீக்கியது செல்லும் என்பதற்கு ஆதாரமாக உச்ச நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பு இருக்கிறது. அப்படியிருக்க, தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி. ஓபிஎஸ்ஸை பி டீமாக பயன்படுத்தி அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் திட்டமிடுகிறார். நேற்று சட்டப்பேரவை முடிந்த பின்னர் ஸ்டாலினும், ஓபிஎஸ்ஸும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர். இந்த முயற்சிகள் எல்லாம் பச்சையாக தெரிகிறது. அரசியல் ரீதியாக ஒரு சபாநாயகர் செயல்படுவது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எதிர்க்கட்சிகளை ஒடுக்கி ஆட்சி செய்கிறார்கள். எங்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்" என்றார்.
போராட்டத்துக்கு காரணம் என்ன? முன்னதாக போராட்டம் தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையை கண்டித்து அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நாளை (புதன்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கட்சியின் அமைப்புரீதியான சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி கேட்டு, கட்சியின் அமைப்புச் செயலாளர் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் ஆகியோர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேரில் மனு அளித்துள்ளனர்" என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் அதிமுக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை (அக்.19) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 62 எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வள்ளுவர்கோட்டம் வந்தனர். போராட்டத்திற்கு அனுமதியில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி பேருந்துகளில் ஏற்றினர். அவர்கள் அனைவரும் சென்னை ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago