சிகிச்சையின்போது கட்டுப்பாடு இன்றி உணவுகள் வழங்கப்பட்டதால் ஜெயலலிதா உடல்நிலை வேகமாக மோசமடைந்தது - ஆணைய அறிக்கையில் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு கட்டுப்பாடு இன்றி உணவுகள் வழங்கப்பட்டதால் அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை, சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவு முறை குறித்து குறிப்பிட்டிருப்பதாவது: தீபாவளி அன்று ஒருமுறையும், தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்ற பிறகு ஒருமுறையும் ஜெயலலிதாவுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி, அவர் விருப்பத்துக்கேற்ப மலை வாழைப்பழம், விதையில்லா திராட்சை, மாம்பழம் ஆகியவற்றை எடுத்துக் கொள்வார் என்று உணவியல் நிபுணர், தனது சாட்சியத்தில் ஒப்புக்கொண்டார்.

ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் அளித்த சாட்சியத்தில், ‘கேக் அல்லது இனிப்புகள் சாப்பிடுவதை ஜெயலலிதா தவிர்க்கவில்லை. மருத்துவமனையில் கூட அவ்வப்போது அவற்றை எடுத்துக்கொண்டார். மருத்துவமனை கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும் பழங்கள் மற்றும் இனிப்புகளை அவர் உட்கொண்டார். உயர்தர சாக்லெட் நிற ஐஸ்கிரீம்களை எடுத்துக்கொண்டார். சில நேரங்களில் பரிந்துரைக்கப்பட்ட உணவு கட்டுப்பாடுகளை தளர்த்தி, நிறைய கேக் மற்றும் இனிப்புகளை எடுத்துக்கொண்டார். தான் விரும்பிய உணவை உட்கொள்வது மட்டுமே, தனக்கு மகிழ்ச்சி தரும் செயல்களில் ஒன்று என்று ஜெயலலிதா கூறியிருந்தார்’ என தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில்கொண்டு பொட்டாசியம், சர்க்கரை உணவுகள் உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டி இருந்தாலும், அவருக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி மேற்கூறிய உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டன. பல ஆதாரங்களை கவனமாக ஆய்வு செய்ததில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, உணவு மற்றும்
ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்காமல் இருந்ததால் அவருடைய உடல்நிலை வேகமாக மோசமடைந்தது.

சசிகலா சாட்சியம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சசிகலாவிடம் எழுத்துப்பூர்வமாக 55 பக்கங்கள் கொண்ட சாட்சியம் பெறப்பட்டுள்ளது. அதில், கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த 20 மருத்துவர்களின் பட்டியலை குறிப்பிட்டுள்ளார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு செப்.21-ம் தேதி, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக
தலைமைச் செயலர் ராமமோகன ராவ் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அறையிலேயே ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு ஆகியோர் ஆலோசனையின் பேரிலேயே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு நான் பொதுச்செயலாளராக வேண்டும் என்று கட்சியில் தீர்மானம் நிறைவேற்றி ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் கொடுத்தார். இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் அவர்தான் முக்கிய பங்காற்றினார். அவர், திமுகவுடன் கைகோத்து பல மறைமுக துரோகங்களை செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தை களங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடும், எனது நற்பெயருக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கத்தோடும் சிலர் நேரடியாகவும், பலர் பிறரின் தூண்டுதலின் பேரிலும் பொய்யான புகார்களை எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி அளித்துள்ளனர் என சசிகலாவின் சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையில் சந்தேகம்

ஜெயலலிதாவுக்கு இதயக் கோளாறு மற்றும் நுரையீரல் பிரச்சினை தொடர்பாக அப்போலோ மருத்துவமனையால் வழங்கப்பட்ட சிகிச்சை பற்றி தொடக்கத்தில் இருந்தே ஆணையத்துக்கு மிகுந்த சந்தேகம் உள்ளது. ஒரு நோயாளிக்கு 10 மி.மீ-க்கு மேல் வெஜிடேசன் இருப்பது கண்டறியப்பட்டால், அது குறிப்பிட்ட காலத்துக்குள் மருந்து மூலம் கரைக்கப்படாவிட்டால் அதற்கு அறுவை சிகிச்சையே மாற்று தீர்வாகும். அத்தகைய நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் அறுவை சிகிச்சை நிபுணரே குழுவின் தலைவராக இருக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே எந்த நுரையீரல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணரும் அவரை பரிசோதிக்க அனுமதிக்கப்படவில்லை. பரிசோதித்திருந்தால் நிச்சயமாக ஆஞ்சியோகிராம் பரிந்துரைக்கப்பட்டு செய்யப்பட்டிருக்கும் என்று ஆணையம் அழுத்தமாக பதிவு செய்கிறது. இந்த நடைமுறையை அப்போலோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரணையின்போது ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டில் சிகிச்சை

ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் சென்றால், அது இந்திய மருத்துவர்களை அவமதிக்கும் செயல். சுகாதாரத்துறை செயலராக தன்னால் அதை அனுமதிக்க முடியாது என்று ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாக அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், அப்போலோ மருத்துவமனையிலேயே சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதால் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.

அப்போலோ மருத்துவமனை மருத்துவர் பாபு ஆபிரகாம், ஒய்.வி.சி.ரெட்டி, சி.விஜயபாஸ்கர், ஜெ.ராதாகிருஷ்ணன், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கு எதிராக இருந்தனர். அனைவரும் அப்போலோ மருத்துவமனை சரியான திசையில் செல்கிறது என்று ஒரே பதிலை கூறினர். விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துகொண்டு, ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காதது வியக்கத்தக்கது. சிகிச்சை தொடர்பாக அவரிடம்
கேட்கப்பட்ட கேள்விக்கு தகவல் கிடைக்கப் பெறவில்லை அல்லது நினைவில் இல்லை என்று கூறியபோதிலும், அப்போலோ மருத்துவர்கள் சிறந்த சிகிச்சை வழங்கினர் என்று ஆணித்தரமாக கூறினார்.

சிசிடிவி கேமரா அகற்றம்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட இடத்தில் பலத்த பாதுகாப்பு இருந்ததுடன், அங்கு நுழையும் நபர்கள் கண்காணிக்கப்பட்டனர் என்றும் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது, பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவ்வித பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை எனவும் இந்த ஆணையம் முடிவு செய்கிறது. இவ்வாறு ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்