ஜவ்வாதுமலை ‘பலாமரத்தூர்’ ஊராட்சியில் சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் வேதனை

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள பலாமரத்தூர் ஊராட்சிக்கு உட்பட கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் மருத்துவ சிகிச்சைக்கு வழியின்றி மலைவாழ் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

பலாமரத்தூர் ஊராட்சியில் புளிச்சங்கோட்டை, வாழக்காடு, சேராமந்தை, நாச்சமலை, பதிரி, மோலையனூர், பெரிய கூத்தனேரி, சின்ன கூத்தனேரி உட்பட சுமார் 18 மலை கிராமங்கள் உள்ளன. 3 ஆயிரம் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். ஜவ்வாதுமலையின் தலைநகரமான ஜமுனாமரத்தூருக்கு, நல்லாப்பட்டு வழியாக வந்து சேர வேண்டும்.

குக்கிராமங்களில் இருந்து 15 கி.மீ., தொலைவுக்கு கரடுமுரடான சாலையை கடந்து நல்லாப்பட்டு சந்திப்பை வந்தடைய வேண்டும். இந்த சாலை, ஊராட்சி ஒன்றியம் மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சாலை வசதி இல்லாததால், மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் மலைவாழ் மக்கள்உயிரிழக்கின்றனர்.

இது குறித்து சேராமந்தை கிராம மக்கள் கூறும்போது, “குக்கிராமங்களில் இருந்து நல்லாப்பட்டு சந்திப்பு வரை, கற்கள் நிறைந்த மற்றும் குண்டும் குழியுமான சாலை உள்ளன. இந்த சாலையின் இடையே குப்பநத்தம் அணைக்கு வழிந்தோடும் 3 நீரோடைகள் உள்ளன. மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது, சாலை பயணம் துண்டிக்கப்படும். சாலை வசதி இல்லாததால் கல்வி மற்றும் மருத்துவம் கிடைப்பதில்லை.

ஜமுனாமரத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றாக வேண்டும். படுமோசமான சாலையால் ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வர மறுக்கப்படு கின்றன. நோயாளிகளை இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்லும்போது ஆபத்தாக உள்ளது. கீழே விழுந்து படுகாயமடைந்து வருகிறோம். நோயாளிகளை டோலியில் சுமந்து செல்கின்றோம்.

பாம்பு கடித்தல், பிரசவம் மற்றும் நோய்களால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களுக்கு, உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், அவர்களது உயிர் பிரிந்துவிடுகின்றன. ஜமுனாமரத்தூர் அரசு மருத்துவமனையிலும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் திருவண்ணாமலை, வேலூர் மற்றும் வாணியம்பாடிக்கு பரிந்துரைக்கப் படுகிறார்கள்.

இதனால், மலையில் இருந்து கீழே இறங்கி வருவதற்குள் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுகிறது. இதில், பிரசவ வலியால் துடிக்கும் தாய்மார்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், மாணவ- மாணவிகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. வாழக்காடு கிராமத்தில் 8-ம் வகுப்பு வரை படிக்கலாம். அதன்பிறகு, ஜமுனாமரத்தூர் மற்றும் ஆலங்காயம் சென்றுதான் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பை தொடர வேண்டும்.

சாலை வசதி இல்லாததால், போக்குவரத்தும் இல்லை. பள்ளிக்கு தனியாக மாணவிகளை அனுப்ப பெற்றோர் மறுத்துவிடுவதால், அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. காட்டெருமைகள் நடமாட்டம் உள்ளதால் மாணவர்கள் உட்பட அனைவரும் மரண பயத்தில் பயணிக்கிறோம்.

சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாத நிலையில் வாழ்கிறோம். தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டு வரும் அரசியல் கட்சியினர், அதன்பிறகு திரும்பி கூட பார்ப்பதில்லை. வாக்கு வங்கிக்காக மலைவாழ் மக்களை பயன்படுத்துகின்றனர். மலைக் கிராமங்களுக்கு சாலையை அமைத்து கொடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE