உள்ளாட்சி 37: பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்கும் கூட்டுறவு அமைப்புக்கும் வித்தியாசம் இல்லை!

By டி.எல்.சஞ்சீவி குமார்

பள்ளிகளுக்கு அறிவியல் சாதனங்கள்... பாண்டி பஜாரில் பெட்ரோல் நிலையம்... நாட்டுக்கே வழிகாட்டிய சிந்தாமணி!

பஞ்சாயத்து ராஜ்ஜியங்களுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடை யாது. அங்கும் இங்கும் ஒரே ஜனநாயகம் தான். பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதி நிதிகள் நிர்வகிக்கிறார்கள். கூட்டுறவு அமைப்பை அதன் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நிர்வகிப்பார்கள். கிராம சபையைப் போலவே கூட்டுறவு அமைப்பில் நிர்வாகக் குழு இயங்கும். சங்கத்தின் நிர்வாகம் மாநில அரசின் கூட்டுறவு சட்டம், விதிகள், துணை விதிகளின் அடிப்படையில் நடக்கும். தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவு 33-ன்படி தன்னாட்சி அதிகாரங்களும் தனக்கே உரிய கடமைகளையும் கொண்டது கூட்டுறவு அமைப்புகள்.

இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ்ஜி யத்தைப் போன்றே வரலாற்றைக் கொண்டது கூட்டுறவு. உள்ளாட்சி அமைப்புகளைப் போன்றுதான் நாட்டில் கூட்டுறவு அமைப்புகளுக்கும் சட்டபூர்வமான பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. அவை அரசுகளால், அரசியல்வாதிகளால், தனி நபர்க ளால் சூறையாடப்பட்டன. மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால், பல்வேறு போராட்டங்கள், சிரமங்களுக்குப் பிறகு கூட்டுறவு அமைப்புகளைப் பாதுகாக்க 2009-ம் ஆண்டு அரசியல் சாசன சட்டத்தில் 97-வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது 2011-ம் ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நாட்டின் அனைத்து கூட்டுறவு அமைப்புகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்பட்டன. தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கூட்டுறவு அமைப்புகளுக்கு அரசியல் சாசன சட்டப் பாதுகாப்பு இல்லாத கால கட்டத்திலேயே அவை திறம்பட இயங்கின. சொல்லப்போனால், இந்த அரசியல் சாசன சட்டத் திருத்தம் வந்த பிறகுதான் நிலைமை மேலும் மோசமானது. ஆனால், ஒருகாலத்தில் நாட்டுக்கே வழிகாட்டின தமிழக கூட்டுறவு அமைப்புகள். இதுகுறித்து நம்முடன் பகிர்ந்துக்கொள்கிறார் கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன்.

“தமிழகத்தில் ‘சிந்தாமணி’ என்கிற பெயர் நினைவிருக்கிறதா? மிகப் பிரபலமான கூட்டுறவு பல் பொருள் அங்காடி அது. சூப்பர் மார்க்கெட். பள்ளிகளுக்குத் தேவை யான பலவற்றையும் ‘சிந்தாமணி’ வழங்கிவந்தது. விளையாட்டுச் சாத னங்களைப் பஞ்சாபில் இருந்தும் ஹரியாணாவில் இருந்தும் நேரி டையாக கொள்முதல் செய்து, பள்ளி களுக்கு குறைந்த விலையில் விற்றது. மத்திய அரசுப் பள்ளிக்கூடங்களில் அறிவியல் கூடங்களை மேம்படுத்தத் திட்டமிட்டது. அதற்காக அரசுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. கல்வித் துறை ஒட்டுமொத்தமாக வாங்கினால் குறைந்த விலையில் பள்ளிகளுக்குக் கிடைக்கும் என்று கருதி செயலில் இறங்கியது. சென் னையில் கடை விரித்திருந்த எந்த நிறுவனமும் எல்லாப் பள்ளிகளுக்கும் சாதனங்களை வழங்கக்கூடிய நிலையில் இல்லை.

அதனால் அவர்கள் கூட்டுச் சேர்ந்து விலையை நிர்ணயம் செய்தார்கள். கூடவே, யார் யார் எந்தெந்தப் பொருட்களை வழங்குவது என்று ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அவர்களது கூட்டுக் கொள்ளையைக் கண்ட நான் ‘சிந்தாமணி, கூட்டுறவு பல்பொருள் அங்காடியை அணுகினேன். அவர்கள் கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் கருவிகளைப் பெற முயற்சி எடுத்துக் கொண்டார்கள். இரண்டு அறிவியல் ஆசிரியர்களை டெல்லி, அம்பாலாவுக்கு அனுப்பி மிகத் தரமான கருவிகளை அரசு நிர்ணயித்த விலையை விட மிகக் குறைந்த விலைக்கு விற்று லாபமும் பெற்றது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.

மாணவர் கூட்டுறவுச் சங்கங்களில் எங்கள் பள்ளி சங்கம் தொன்மை யானது, சிறப்பாக செயல்பட்டது. மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்வதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டது. சுங்கத் துறை யில் பதிவு செய்துகொண்டு பறிமுதல் செய்யப்பட்டக் கடத்தல் பொருட்களை அது பெற்றுத் தந்தது. ஒருமுறை பொறியியல் மாணவர்களுக்கான வரைதல் கருவிகள் கிடைத்தன. சந்தையில் ரூ.150 மதிப்புள்ள கருவிகளை ரூ.50-க்குப் பெற்று பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விற்றோம். கிடைக்கும் லாபத்தில் பல மாணவர்களுக்கு உதவி செய்ய முடிந்தது. பாடநூல் நிறுவன வெளி யீடுகளைப் பதுக்கி அதிக விலையில் தனியார் விற்பதைக் கண்ட அதன் தலைவர் ஆர்.குழந்தைவேலு இ.ஆ.ப., எல்லாப் பள்ளிகளிலும் கூட்டுறவுச் சங்கங்களை அமைத்திட கல்வித் துறைக்குப் பரிந்துரைத்தார். அதன்படி பள்ளிகளில் கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை பெரு கியது.

கூட்டுறவுச் சங்கப் பொறுப்பை ஏற்பதில் ஆசிரியர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். தஞ்சாவூர் மாவட்டம், சந்திரசேகரபுரம் கூட்டுறவு நிறு வனம் அகில இந்திய அளவில் புகழ்பெற்றது. கோவை மாவட்ட உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் கூட்டுறவு இணையம் 100-க்கும் மேற்பட்ட கிளைச் சங்கங்களைக் கொண்டது. உற்பத்தியாளரிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து நுகர்வோர்க்கு விற்ப தால் இரு தரப்பினரும் பயனடைந் தனர். விலைவாசிக் கட்டுக் குள் வைக்கப்பட்டது. ஜி.ஆர்.கோவிந் தராஜுலு தலைவராக இருந்தபோது மேலைநாடுகளைப்போல அனைத் துப் பொருட்களும் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நிறுவினார்.

தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் அதற்கு ‘சிந்தாமணி’ என்கிற பெய ரைப் பரிந்துரைத்தார். இப்படிதான் பிறந்தது ‘சிந்தாமணி’ பல்பொருள் அங்காடி.

‘சிந்தாமணி’-யில் மளிகை முதல் மருந்துகள் வரை சகல பொருட்களும் கிடைத்தன. கோவை யில் முதலாவதாக அனைத்துப் பொருட்களும் பேக்கிங் செய்யப் பட்டன. தூய்மை பராமரிக்கப்பட்டது. எடை மிகச் சரியாக இருக்கும். விலையும் குறைவு. மக்கள் சாரி சாரியாக திருவிழாவுக்குச் செல்வது போல் சிந்தாமணிக்கு வருவார்கள். இதன் வெற்றியைப் பார்த்து சென் னையிலும் கிளைகள் தொடங்க அரசு கேட்டுக் கொண்டது. சென்னை அண்ணா நகரிலும் பாண்டி பஜாரிலும் கிளைகள் திறக்கப்பட்டன.

பாண்டி பஜாரில் பெட்ரோல் நிலையம் தொடங்கி சிறப்பாக செயல்பட்டது. திருச்சியிலும் கிளையை நிறுவினர். இன்றும் சென்னை அண்ணா நகரில் ‘சிந்தாமணி’ பஸ் நிறுத்தம் இருக் கிறது. மிகச் சிறந்த முறையில் இயங்கி வந்த ‘சிந்தாமணி’-யின் தொய் வுக்கு அரசியல் தலையீடே காரணம்.

கூட்டுறவு என்று சொன்னாலே ஒருவர் பெயர் முன் நிற்கும் அவர் தான் கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பெற்ற டி.ஏ.இராம லிங்கம் செட்டியார். மற்றொருவர் சென்னை மாகாண கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர். அவர் பெயர் நினைவில்லை... ஆங்கிலோ இந்தியனோ அல்லது கிறிஸ்துவரோ ஆவார். சென்னை மாகாணம தான் முதன்முதலாக கூட்டுறவுச் சட்டம் இயற்றிய பெருமைக்குரியது.

இரண்டாம் உலகப் போரின்போது ரேஷன் முறை வந்தது. மக்க ளுக்கு ரேஷன் பொருட்களை விநி யோகிக்க கூட்டுறவுச் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு, அரும்பணி யாற்றின. உணவுப் பொருட்கள் மட்டுமின்றி துணியும் ரேஷனில்தான் வாங்க முடியும்.

கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிகச் சிறந்த முறையில் கூட்டுறவு அமைப்பு இயங் கியது. கோயம்புத்தூரில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும், ஒவ்வொரு மில்லிலும் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டன. அவை தொழி லாளர்களுக்கு ரேஷன் வழங்கு வதில் முன்னிலை வகித்தன. கூட்டுறவு வங்கிகளும் விவ சாயிகளுக்குப் பேருதவியாக இருந்தன. குறை சொல்ல வேண்டுமென்றால் கூட்டுறவு இயக் கத்தில் பெரும் நிலச்சுவான்தார்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் இருந் தார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் அனைத்து கட்சிகளுமே சேர்ந்து, திட்டமிட்டு, மக்கள் இயக்கமாக இருந்த கூட் டுறவு அமைப்புகளை அழிக்கத் தொடங்கின. அழிவைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. பஞ்சாயத்து ராஜ்ஜியங்களுக்கு இணை யான கூட்டுறவு அமைப்புகள் என் கண் முன்னால் அழிந்ததை நினைக்கும் போது கண்கள் கலங்குகின்றன” என்றார்.

- பயணம் தொடரும்...

கடந்த 35-வது அத்தியாயத்தில் ராஜபாளையம் பி.எல்.குமாரசாமி முதலியார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் முதல்வர் ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா என்பதே சரி. தவறுக்கு வருந்துகிறோம்

- ஆசிரியர்



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

43 secs ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்