மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி; அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை: அன்புமணி  

By செய்திப்பிரிவு

சென்னை: மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி திட்டத்தில் அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், மருத்துவப் பாட நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் வெளியிடப்படவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நோக்கம் நேர்மையானதாக இருந்தால் அது நிச்சயமாக வரவேற்கத்தக்கது ஆகும்.

மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவப் படிப்பை பயிற்றுவிக்கும் திட்டத்தின்படி அம்மாநில அரசால் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள மருத்துவ பாடநூல்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக அனைத்து மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம், மாநில மருத்துவ கவுன்சில்கள், மருத்துவப் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கான உயர்நிலைக் குழுவின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மொழியில் மருத்துவப் பாடநூல்களை மொழிபெயர்ப்பதற்கு வசதியாக மருத்துவப் பதங்களுக்கான தமிழ் சொற்கள் அடங்கிய சொற்களஞ்சியத்தை உருவாக்கும் பணியை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப படிப்புகளும் தமிழ்நாட்டில் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான கொள்கை ஆகும். தமிழக அரசுடன் இணைந்து தமிழில் தரமான மருத்துவ நூல்களை தயாரித்து, தாய்மொழியில் மருத்துவப் படிப்பு வழங்கப்பட்டால், தாய்மொழி வழிக்கல்வியை உறுதி செய்யும் பயணத்தில் அது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைவது உறுதி.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர்களுக்கு புரியும் மொழியில் மருத்துவர்கள் விளக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே தாய்மொழி வழி கற்பித்தல் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்மொழிவழி கற்பித்தலுடன் ஆங்கில வழி கற்பித்தலும் தொடரும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதிலும் எந்த சிக்கலும் இல்லை.

ஆனால், மாநில மொழிகளில் மருத்துவம் பயிற்றுவிக்கும் முறை நடைமுறைக்கு வரும் போது ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், வேறு மொழி பேசும் மாநிலத்திற்கு சென்று மருத்துவப் படிப்பை படிப்பதில் சிக்கல் ஏற்படும். எடுத்துக்காட்டாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கர்நாடக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து கன்னட மொழியில் மருத்துவம் பயில்வதோ, இந்தி பேசும் மாநில மாணவர்கள், தமிழ்நாட்டு கல்லூரிகளில் சேர்ந்து தமிழில் மருத்துவப் படிப்பை படிப்பதோ நடைமுறை சாத்தியமல்ல.

2022-23 ஆம் ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சுமார் 7,200 இடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். இந்த இடங்களில் சேரும் மாணவர்களில் பெரும்பான்மையினர் வெளி மாநில மருத்துவக் கல்லூரிகளில் தான் சேர்ந்து படிக்க வேண்டியிருக்கும். அவர்கள் சேரும் மாநிலங்களில், அம்மாநில மொழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப் படும் என்பதால், அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்காகத் தான் கூடுதலாக ஆங்கிலத்திலும் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுகிறது என்று அரசு தரப்பில் வாதிடப்படலாம். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் நோயாளிகளுக்கு புரியும் மொழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம் என்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும், அம்மாநில மொழியில் அம்மாநில மாணவர்களுக்கு மட்டும் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுவது தான் சரியானதாக இருக்கும்.

இச்சிக்கலுக்கு ஒரே தீர்வு மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்வதும், அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநில மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிப்பதும் தான். அகில இந்திய ஒதுக்கீடு 36 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட போது வேண்டுமானால், அதற்கான தேவை இருந்திருக்கலாம். அதன்பின் 36 ஆண்டுகளில் மருத்துவக் கல்வி பரவலாக்கப்பட்டுள்ளது; அனைத்து மாநிலங்களிலும் போதிய எண்ணிக்கையில் மருத்துவக் கல்வி இடங்கள் உள்ளன. அதனால், அகில இந்திய ஒதுக்கீடு என்ற கொள்கைக்கு இன்றைய சூழலில் எந்தவிதத் தேவையும் இல்லை.

எனவே, தாய்மொழிவழி மருத்துவக் கல்வி கற்பித்தல் திட்டத்திற்கு முன்னோட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவக் கல்வி திட்டத்தை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பள்ளிக்கல்வியில் தமிழை கட்டாய பயிற்றுமொழியாக்க சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்