தாமதமின்றி பட்டாசு விற்பனை உரிமம்: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள வியாபாரிகளின் மனுக்களை விரைந்து முறையாக விசாரித்து அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பட்டாசு, பலகாரம், புத்தாடை ஆகியவை தீபாவளியின் முக்கிய அம்சங்களாகும். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதற்கு ஏற்ப, ஆங்காங்கே பட்டாசு கடைகள் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில், அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தீபாவளியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பட்டாசு கடைகள் அமைப்பதற்கும், பட்டாசுகள் விற்பதற்கும், உரிமம் வேண்டி காவல் துறையிடம் வியாபாரிகள் பலர் விண்ணப்பித்து இருப்பார்கள். அவர்களின் விவரங்களை விரைவாக பரிசீலித்து, அரசின் சட்ட திட்டங்களை பூர்த்தி செய்பவர்களுக்கு தாமதமின்றி பட்டாசு விற்பனை உரிமம் வழங்க வேண்டும். தேவையின்றி காலம் தாழ்த்தக் கூடாது. இது வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, காவல் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி, காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE