‘திராவிட மாடல்’ தத்துவத்தால் வட மாநிலங்களை திரும்பி பார்க்க வைத்த ஸ்டாலின்: ஆ.ராசா கருத்து

By செய்திப்பிரிவு

திராவிட மாடல் என்ற தத்துவத்தால் வட மாநிலங்களை முதல்வர் ஸ்டாலின் திரும்பி பார்க்க வைத்துள்ளார் என, நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.

திமுக துணைப் பொதுச் செயலாளராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட ஆ.ராசா, நேற்று நீலகிரி மாவட்டம் வந்தார். அவருக்கு மாவட்ட திமுக சார்பில், குன்னூர், உதகை, கூடலூர் ஆகியஇடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து ஆ.ராசா பேசும்போது, “வரும் மக்களவைத் தேர்தலில் யார் பிரதமர் என்பதை ஸ்டாலின் தீர்மானிப்பார்.

மதங்கள், ஜாதிகள் பெயரில் அரசியல் நடத்தும் ஆரிய மாடல் உள்ள வட மாநிலங்களுக்கு தெரியாத சமூக நீதி, சமத்துவ தத்துவங்களை திராவிட மாடலாக அடையாளம் காட்டியுள்ளார். திராவிட மாடல் என்ற தத்துவத்தால் வட மாநிலங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஸ்டாலின்.

நிதி பற்றாக்குறையிலும், கரோனா காலத்தில் மக்களுக்கு முதல்வர் நிவாரணம் வழங்கினார். தற்போது நிலைமையை சீர்படுத்தி வருகிறார். விரைவில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்.

மூடப்படும் நிலையில் இருந்த டான்டீ நிறுவனத்தை புனரமைக்க, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடலூர், குன்னூர், உதகையிலுள்ள பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் விதிமீறிய கட்டிடங்களை வரன்முறைப்படுத்த முதல்வரிடம் கோரியுள்ளோம். வேலைவாய்ப்பை உருவாக்க உதகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்” என்றார். மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், துணைச் செயலாளர் ஜே.ரவிகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE