கீழணையில் இருந்து உபரி தண்ணீர் வெளியேற்றம்: கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கீழணையில் இருந்து கொள்ளிடம்ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்படும் என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கடும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி தண்ணீர் விநாடிக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர், காவிரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது.

பவானிசாகர் பகுதியில் பெய்யும் மழையும், கொள்ளிடம் ஆற்றில் அந்தந்த பகுதியில் பெய்யும் மழை தண்ணீயுடன் சேர்ந்த உபரிநீரும் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது. கீழணையில் 8 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க முடியாது என்பதால், நேற்று கீழணையில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொள்ளிடம் வடிநில கோட்ட சிதம்பரம் நீர் வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உபரி நீர் படிப்படியாக விநாடிக்கு 2 ஆயிரத்து 20 ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கொள்ளிடம் ஆற்றின் வழியே வரும்உபரிநீர் அப்படியே, இன்று (அக்.17) மதியம் முதல் கீழணையிலிருந்து வெளியேற்றப்படும். இதனால் கரையோரம் மற்றும் அதனைச் சார்ந்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றில் இறங்கவோ, ஆற்றில் இறங்கி குளிக்கவோ, புகைப்படம், செல்பி அல்லது ஆற்றில் இறங்கி கடக்கவோ வேண்டாம் என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE