சென்னை: தமிழகத்தில் மாணவி சத்யாவுக்கு நடந்ததுயரம் இனி எந்தவொரு பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. அதற்கேற்ப இளைஞர்களை, பிற உயிரை மதிக்கும் பண்பு மிக்கவர்களாக பெற்றோர், ஆசிரியர்கள் இணைந்து வளர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 389 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இம்முகாமில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வேலைவாய்ப்பு பெற்ற ஒரு லட்சமாவது நபருக்கு பணி ஆணையை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து முதல்வர் பேசியதாவது:
இளைஞர்களின் கனவு நாயகன் அப்துல் கலாம் பிறந்த நாளில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது மகிழ்ச்சி. இதேபோல், எனது தொகுதியான கொளத்தூர் உட்பட 234 தொகுதியிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட வேண்டும். அதை நிச்சயம் தொழிலாளர் நலத்துறையினர் நிறைவேற்றுவர்.
கரோனா பரவல் நெருக்கடியில்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், அதை காரணமாக வைத்து வேலையின்மையை கவனிக்காமல் அரசு விட்டுவிடவில்லை. கடந்த 15 மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மொத்தம் 883 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த முகாம்கள் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். இதில் மாற்றுத் திறனாளிகளும், திருநங்கைகளும் அடங்குவர். இதுதான் திராவிட மாடல். அந்தவகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதை இலக்காக வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
ஒரு இளைஞருக்கு வேலை கிடைப்பதன் மூலம் அவரது தலைமுறையே முன்னேற்றப் பாதைக்குச் செல்கிறது. தமிழக இளைஞர்கள், மாணவர்களை தகுதி, திறமை, அறிவுமிக்கவர்களாக ஆக்குவதுதான் திமுக ஆட்சியின் அடிப்படை நோக்கம். அதற்காகவே ‘நான் முதல்வன்’ எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்கி வருகிறோம். வேலை இல்லை என்ற நிலை இருக்கக் கூடாது. வேலைக்கு திறமையான இளைஞர்கள் இல்லை எனும் சூழலும் ஏற்படக் கூடாது.
இந்த தருணத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் வருத்தத்துடன் நான் குறிப்பிட விரும்புகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் சத்யாஎன்ற ஒரு மாணவிக்கு நடந்த துயரத்தைஅறிந்து நான் நொறுங்கி போயிருக்கிறேன். இத்தகைய சம்பவங்கள், இனி தமிழகத்தில் நிகழக்கூடாது,
இது நாம் காண விரும்பக்கூடிய சமூகமல்ல. இனி எந்த பெண்ணுக்கும் இதுபோல், நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை நமக்குள்ளது. பிள்ளைகளை அறிவாற்றல், தனித்திறமையில் சமூக நோக்க மனப்பான்மையும் கொண்டவர்களாக பெற்றோர் வளர்க்க வேண்டும்.
பாடப்புத்தக கல்வி மட்டுமல்ல, சமூகக் கல்வியும் அவசியமானது. பிற உயிரை மதிக்க, பாதுகாக்க கற்றுத்தர வேண்டும். அவர்கள் எந்தவகையிலும் திசைமாறி சென்று விடாதபடி வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோருக்குதான் இருக்கிறது. இயற்கையில், ஆண் வலிமையுடையவனாக இருக்கலாம். அந்தவலிமை பெண்களை பாதுகாக்கக் கூடியதாக வேண்டும்.
கடந்த ஓராண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு தொழில் ஒப்பந்தங்களின் காரணமாக சுமார் 2 லட்சம் புதியவேலை வாய்ப்புகள் கிடைக்க இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த பலன்களை நமது இளைஞர்கள் பெறுவார்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் சி.வி.கணேசன், பி.கே.சேகர்பாபு, திமுக எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் ஆர்.பிரியா,தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவராவ், புது கல்லூரி தலைவர் ஆற்காடு நவாப் முகமது அப்துல்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
21,623 பேர் பங்கேற்பு
இந்த வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 21,623 பணிநாடுநர்கள் பங்கேற்றதில் 26 மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 2,742 பேர் பணிநியமனம் பெற்றனர். முதல்கட்ட நேர்முகத் தேர்வில் 2,477 பேர் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் 726 பதிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago