சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து கடந்த 80 நாட்களாக நடத்தி வந்த போராட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்திய விமான போக்குவரத்து துறை சார்பில் பரந்தூரில் ரூ.60 ஆயிரம் கோடியில், 4,971 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்க உள்ளது.
இந்நிலையில், விமான நிலையம் அமைய உள்ள ஏகனாபுரம் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பரந்தூர் விமான நிலையம் அமையும் இடத்தில் 1,350 ஏக்கர் பகுதி நீர்நிலை புறம்போக்கு நிலங்களாக உள்ளது. இங்கு விமான நிலையம் அமைத்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். வரும் 17-ம் தேதி சட்டப்பேரவை நோக்கி நடைபயணம் தொடங்குவதாகவும் கூறினர்.
இந்நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கொண்ட குழு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
» அதிமுக எம்எல்ஏக்களுடன் பழனிசாமி இன்று ஆலோசனை
» தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் வட்டத்தில் 7 வருவாய் கிராமங்கள், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 6 வருவாய் கிராமங்கள் என 13 வருவாய் கிராமங்களில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஏகனாபுரம் கிராம விவசாயிகள் அவர்களுடைய நிலத்தை கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவித்ததால் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து ஏகனாபுரத்தை சேர்ந்த க.சரவணன், ப.ரவிச்சந்திரன், து.கதிரேசன், செ.கருணாகரன், ச.கணபதி, க.சுப்பிரமணியன், வெ.முனுசாமி, லோ.இளங்கோ ஆகிய விவசாயிகளுடன் தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏகனாபுரம் விவசாயிகள் கூறும்போது, ‘‘இக்கிராமத்தில் 2,400 பேர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் விவசாயமே பிரதான தொழில். எங்கள் கிராமம் வழியாக செல்லும் கம்பக் கால்வாய், விமான நிலையத்துக்காக கையகப்படுத்தும் பகுதியில் உள்ளது. எங்கள் கிராமமே ஒரு சமத்துவபுரமாக உள்ளது. எங்கள் கிராமம் பாதுகாக்கப்பட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டனர்.
பின்னர் பேசிய அமைச்சர்கள், ‘‘ஒருவரும் பாதிக்கப்படக் கூடாதுஎன்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதற்காகத்தான் வாழ்வாதாரத்துக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும், சந்தை மதிப்புக்கு 3.5 மடங்கு இழப்பீடு கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். கிராம மக்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம்’’ என்று விவசாயிகளிடம் உறுதியளித்தனர்.
பேச்சுவார்த்தையின்போது தொழில் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் ஜெய முரளிதரன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜி.சிவருத்ரய்யா, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக பொது மேலாளர் புவனேஸ்வரி பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் விவசாயிகள் கூறியபோது, ‘‘கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று,உங்களை பாதிக்காத வகையில் எப்படி திட்டத்தை செயல்படுத்துவது என்பது குறித்து விவாதித்து, உரிய தீர்வு காணப்படும் என்று அமைச்சர்கள் குழு உறுதி அளித்துள்ளனர். எனவே, கடந்த 80 நாட்களாக நாங்கள் நடத்தி வரும் போராட்டங்களை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வது எனவும், வரும் 17-ம் தேதி அறிவித்திருந்த நடைபயணத்தை நிறுத்திவைப்பது எனவும் முடிவெடுத்து, அமைச்சர்கள் குழுவிடம் தெரிவித்திருக்கிறோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
23 hours ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago