பொதுமக்கள் விரும்பாவிட்டால் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். அதைவிட்டு மது விற்பனையில் அரசு தீவிரம் காட்டுவது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மதிமுக பொதுச் செயலர் வைகோவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை (10862) அகற்றக் கோரி கலிங்கப்பட்டி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகும் டாஸ்மாக் கடை மூடப்படாததால், கலிங்கப்பட்டி யில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக வைகோ உட்பட பலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நி்லையில், கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்து நெல்லை ஆட்சியர் உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்யவும், கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடக் கோரியும் வைகோவின் சகோதாரரும், கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவருமான வை.ரவிச்சந்திரன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஊராட்சி தீர்மானத்தை நிராகரித்து நெல்லை ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந் நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எழவில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தான் கடை உள்ளது. ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதற்காக டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டியதில்லை. இவ்வாறு ஒவ்வொரு ஊராட்சியும் தீர்மானம் நிறைவேற்றினால் டாஸ்மாக் கடைகளை எங்கு வைப்பது?.
கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை பொதுமக்கள் எதிர்க்கின்றனர் என்கின்றனர். ஆனால் அந்த கடையில் தினமும் ரூ.90,000-க்கு மதுபானம் விற்பனையாகிறது. கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையால் எந்த விதி மீறலும் இல்லை, யாருக்கும் பாதிப்பும் இல்லை என்றார்.
டாஸ்மாக் வழக்கறிஞர் வாதிடும்போது, மது விற்பனை அரசின் கொள்கை முடிவு. கொள்கை முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ஊராட்சிகளுக்கு அதிகாரம் கிடையாது. இந்த மனு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இங்கு மது விற்பனையை எதிர்ப்பவர் ஒரு பக்கம் புகையிலை தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாதிடும்போது, கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என 2002-ம் ஆண்டிலேயே ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை வேண்டாம் என ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நிறைவேற்ற வேண்டும் என ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள் உத்தர விட்டுள்ளன. இதனால் கலிங்கப் பட்டி டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்றார்.
இதையடுத்து, ஊராட்சியில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களும் டாஸ்மாக் கடை வேண்டாம் என்றுச் சொல்லும்போது மூடினால் என்ன?. அதைச் செய்யாமல், ஒவ்வொரு ஊராட்சியும் தீர்மானம் நிறைவேற்றினால் டாஸ்மாக் கடையை எங்கே வைப்பது என எங்களிடமே (நீதிபதிகளிடம்) கேட்கிறீர்கள். கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அங்கிருந்து மாற்றுகிறீர்களா?, இல்லையா? என்பதை இன்று தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago