“22% ஈரப்பத நெல்லுக்கு அனுமதிப்பீர்” - டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்தியக் குழுவிடம் வலியுறுத்தல்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து இன்று (அக்.15) காலை நேரில் ஆய்வு செய்த மத்திய குழுவினரிடம், தொடர்ந்து மழை பெய்வதால் 22 சதவீதம் வரை நெல் ஈரப்பதத்தில் தளர்வு அளிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக நிகழாண்டு முன்கூட்டியே மே 24-ல், மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதை பயன்படுத்தி 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடந்துள்ளது. சாகுபடி முன்கூட்டியே தொடங்கியதால், அறுவடையும் முன்கூட்டியே தொடங்கியது. இதையடுத்து நெல் கொள்முதல் மையங்கள் செப்.1 முதல் செயல்படும் என அரசு அறிவித்தது. இவற்றில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், நெல் மூட்டைகளை விற்க முடியாத நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. மேலும் மத்திய உணவுத் துறை அமைச்சரை தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் நேரில் சந்தித்து ஈரப்பதத்தை 22 சதவீதம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து, நெல் ஈரப்பதம் குறித்து மத்திய உணவு கழகத்தின், ஹைதராபாத் உணவு தரக் கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குநர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் எம்.இசட்.கான், சென்னை உணவு தரக்கட்டுப்பாட்டு பிரிவு தொழில்நுட்ப அதிகாரி சி.யுனஸ், தமிழக நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாட்டு பொது மேலாளர்கள் செந்தில், மகாலெட்சுமி அடங்கிய குழுவினர் இன்று நேரில் கள ஆய்வு செய்தனர்.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள நெல்லில் இருந்து ஈரப்பதம் எவ்வளவு உள்ளது என சோதனை செய்தனர். மேலும், நெல் மாதிரிகளை சேகரித்து கொண்டனர். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளையும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடமும் விளக்கமும் கேட்டறிந்து கொண்டனர்.

தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தரக்குடி, சடையார்கோவில், பொன்னாப்பூர் ஆகிய பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்திலும் ஆய்வு செய்தனர். மத்திய குழுவினரால் சேகரிக்கப்படும் நெல் மாதிரிகளை இந்திய உணவுக் கழக ஆய்வகத்தில் பரிசோதித்து, அதன் ஆய்வு அறிக்கை அடிப்படையில், நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்துவது குறித்து, மத்திய அரசு முடிவு எடுக்கும்‌ என ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ராஃபி பருவத்தில் குறுவை நெல் அறுவடை செய்யப்படுகிறது. இந்தக் காலம் மழைக்காலமாக இருப்பதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். எனவே, ஈரப்பதத்தின் அளவை நிரந்தரமாக 22 சதவீதம் வரை தளர்த்தி மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்