சென்னை: "பள்ளிக்கல்வி நிர்வாக நடைமுறையை மேம்படுத்துவதற்காக தனியார் நிறுவன வல்லுநர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக தனியார் நிறுவனங்கள் மூலம் வல்லுனர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. நிர்வாகத்திற்கு தேவையான பணியாளர்களையும் தனியார் நிறுவனங்கள் மூலம் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் திறமையான நிர்வாகிகள் இருக்கும் நிலையில், அவர்களை புறக்கணித்து விட்டு, தனியார்துறை வல்லுனர்களை நியமிப்பது ஆரோக்கியமான அணுகுமுறையல்ல.
தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், ஆசிரியர் கல்வி ஆகிய மூன்று திட்டங்களும் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்கச் செய்தல், சமத்துவம், தரம் மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவை தான் இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் ஆகும். இவை உன்னதமானவை; இன்றைய காலச்சூழலுக்கு தேவையானவை என்பதில் ஐயமில்லை.
ஆனால், இந்த நோக்கங்களை நிறைவேற்றவும், தமிழகத்தில் தரமான பள்ளிக்கல்வியை வழங்கவும் வசதியாக நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக தனியார் நிறுவனங்கள் மூலம் வல்லுநர்களை நியமிக்கவும், இதற்கு தேவையான பணியாளர்களை குத்தகை அடிப்படையில் பெறவும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது. இந்த சேவைகளை வழங்குவதற்கான தனியார் நிறுவனங்களை தேர்வு செய்ய திட்ட வரைவுகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் கோரியுள்ளது.
» T20 WC | புகுந்து விளையாடலாம்... மைதானம் பெருசு... - ரவிச்சந்திரன் அஸ்வின்
» உலக பட்டினி குறியீடு 2022 வெளியீடு | 107-வது இடத்தில் இந்தியா: மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தனியார் நிறுவனங்களிடமிருந்து வல்லுனர்களை நியமித்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை அடிப்படையில் பணியாளர்களைப் பெற்றும் தான் இதை சாதிக்க முடியும் என்று அரசு நினைப்பது தான் வியப்பை அளிக்கிறது. இது தமிழக பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக வலிமையையும், அடிப்படைக் கட்டமைப்பையும் குறைத்து மதிப்பிடும் செயல் ஆகும்.
தமிழ்நாட்டில் ஆங்கில வழிக்கல்வி மீதான பெற்றோர்களின் மோகம் காரணமாகவும், தனியார் பள்ளிகளுக்கு சாதகமான அரசின் கொள்கை காரணமாகவும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருக்கலாம். ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கல்வித் தரமும் கூட குறைந்திருக்கலாம். ஆனால், அரசுப் பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாகக் கட்டமைப்பு இன்னும் வலிமையாகவே இருக்கிறது. தேவையான கட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டால், தமிழக அரசு பள்ளிகளின் தரம் என்பது தனியார் பள்ளிகளின் தரத்தை விஞ்சிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியாவில் விரிவான பள்ளிக்கல்வி கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு தான். இப்போதும் கூட தமிழகத்தின் அரசு பள்ளிகள் கட்டமைப்பு வலுவானது தான். பள்ளிக்கல்வித் துறையில் முதன்மைச் செயலாளர் தொடங்கி இல்லம் தேடி கல்வி வரை 7 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் உள்ளனர். இயக்குநர் நிலையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் இணை இயக்குநர் நிலையில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் உள்ளனர். இவர்கள் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட பல நிலைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள். கல்வித் தரத்தை மேம்படுத்துவதாக இருந்தாலும், நிர்வாகத்தை செம்மைபடுத்துவதாக இருந்தாலும் இவர்களால் முடியாதது இல்லை. இவர்களால் முடியாததை கல்வித் துறை சார்ந்த எந்த அனுபவமும் இல்லாத தனியார்துறை வல்லுநர்கள் மூலம் சாதிக்க முடியும் என்று தமிழக அரசு நம்புவது வியப்பளிக்கிறது.
1954-ஆம் ஆண்டு காமராசர் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, சீரழிந்து கிடந்த பள்ளிக்கல்வியை செம்மைப்படுத்த பொதுக்கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டவர் நெ.து.சுந்தரவடிவேலு. காமராசரின் ஆதரவுடன் ஒற்றை ஆளாக பள்ளிக்கல்வியை மேம்படுத்தினார். இலவசக் கல்வி, இலவச மதிய உணவு, இலவச சீருடைகள், அனைத்து கிராமங்களிலும் தொடக்கப் பள்ளிகளை திறந்தது, அவற்றில் படித்த உள்ளூர் இளைஞர்களை ஆசிரியர்களாக நியமித்தது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் காமராசருக்கு துணையாக இருந்தவர் நெ.து.சுந்தர வடிவேலு தான். அப்போது அமைக்கப்பட்ட வலுவான அடித்தளம் தான் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் இன்றளவும் சிறப்பாக செயல்படக் காரணம் ஆகும்.
நெ.து.சுந்தரவடிவேலுவின் வழி வந்த நிர்வாகத் திறமை மிக்க பல அதிகாரிகள் பள்ளிக்கல்வித் துறையில் உள்ளனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியை மேமபடுத்துவதற்கான பணிகள் அவர்களைக் கொண்டு தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதை விடுத்து தனியார் நிறுவன வல்லுனர்களை நியமிப்பது பயனற்றதாகவும், வீண் செலவாகவும் தான் அமையும். அதுமட்டுமின்றி, பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைப்பது , கூடாரத்திற்குள் தலையை மட்டும் நுழைத்துக் கொள்ள ஒட்டகத்தை அனுமதிப்பது போன்று, அரசு பள்ளிக்கல்வித்துறையை தனியாருக்கு திறந்து விடும் செயலாக அமைந்து விடும். மிகவும் ஆபத்தான இந்தப் பாதையில் அரசு பயணிக்கக்கூடாது.
எனவே, பள்ளிக்கல்வி நிர்வாக நடைமுறையை மேம்படுத்துவதற்காக தனியார் நிறுவன வல்லுநர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். மாறாக, பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர் நிலை அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்து அரசு பள்ளிகளின் கல்வித் தரம், நிர்வாக நடைமுறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை பெற்று அரசு செயல்படுத்த வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago