எம்ஏஎம்ஆர்.முத்தையாவை சுவீகாரம் எடுத்தது செல்லாது - இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி கோயில் டிரஸ்ட் அறிவிப்பு

By குள.சண்முகசுந்தரம்

செட்டிநாடு குழும தலைவரான எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் சுவீகாரம் எடுத்தது செல்லாது என இளையாத்தங்குடி ஸ்ரீகைலாசநாத சுவாமி நித்யகல்யாணி அம்மன் தேவஸ்தானம் முறைப்படி மீண்டும் அறிவித்திருக்கிறது.

செட்டிநாடு குழுமத்தின் முன்னாள் தலைவரான எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் ஒக்கூரைச் சேர்ந்த ஐயப்பன் செட்டியார் என்பவரை சுவீகாரம் எடுத்திருந்தார். செட்டிநாட்டு நகரத்தார்கள் (செட்டியார்கள்) சுவீகாரம் எடுப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இதற்கென கண்டிப்பான சில விதிமுறைகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, சுவீகாரம் எடுப்பவரும் கொடுப்பவரும் ஒரேபிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

செட்டிநாட்டு நகரத்தார்களுக்கு என 9 நகர கோயில்கள் இருக்கின்றன. நகரத்தார்கள் அனைவருமே இந்த நகர கோயில்கள் ஏதாவதுஒன்றுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருப்பார்கள். இந்த 9 கோயில் நகரத்தார்களுக்குள்ளும் உட்பிரிவுகளும் இருக்கின்றன. நகரத்தார் வீடுகளில் சுவீகாரம் எடுத்தால் அவர்கள் சம்பந்தப்பட்ட கோயிலில் முறைப்படி பதிவு செய்த பிறகுதான் சுவீகாரம் எடுக்க முடியும்.

அதேசமயம், ஒரே கோயிலாக இருந்தாலும் அவர்கள் சார்ந்த உட்பிரிவுக்குள் மட்டுமே சுவீகாரம் கொடுக்கவோ, எடுக்கவோ முடியும் என்பது கட்டாய விதி. திருமணத்துக்கும் இதுபோல பதிவு செய்து கோயில் மாலை பெற்றுதான் திருமணத்தை நடத்த முடியும். ஆனால், உட்பிரிவுக்கு வெளியேதான் திருமண பந்தங்கள் இருக்கும்.

எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார், இளையாத்தங்குடி கைலாசநாத சுவாமி கோயிலில் பட்டிணசாமி பிரிவைச் சேர்ந்தவர். முறைப்படி இவர் சுவீகாரம் எடுப்பதாக இருந்தால் இந்தப் பிரிவுக்குள் இருந்துதான் எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த விதியை மீறி,இதே கோயிலுக்குள் வரும் கழனிவாசல் பிரிவைச் சேர்ந்த ஐயப்பனை (எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா) சுவீகாரம் எடுத்தார் எம்.ஏ.எம்.ராமசாமி. இது அப்போதே சர்ச்சையானது. ஆனால், எம்ஏஎம்-மின் செல்வாக்குக்கு முன்னால் அந்த எதிர்ப்புகள் அப்போது எடுபடாமல் போனது.

இந்த நிலையில், எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் அவரால் சுவீகாரம் எடுக்கப்பட்ட ஐயப்பன் என்ற முத்தையாவுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. தனது கடைசி காலத்தில், “முத்தையா எனக்கு ஈமக் காரியங்கள்கூட செய்யக் கூடாது. எனது சொத்தில் ஒரு ரூபாய்கூட அவருக்குக் கிடையாது” என்றெல்லாம் அறிவித்தார் எம்ஏஎம். இதை உயிலாகவும் எழுதினார். அத்துடன், ‘‘முத்தையாவை நான் முறைதவறி சுவீகாரம் எடுத்துவிட்டேன் எனவே, அவரது கோயில் புள்ளியை ரத்து செய்யவும்’’ என இளையாத்தங்குடி கோயில் டிரஸ்ட்டுக்கு கடிதமும் எழுதினார்.

அவரது கடிதத்தை ஏற்ற டிரஸ்ட் நிர்வாகம், முறைப்படி அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் (தீர்மானம் எண் 541) நிறைவேற்றி முத்தையாவின் கோயில் புள்ளியை ரத்து செய்தது. இதுகுறித்து எம்ஏஎம்.முக்கு முறைப்படி கடிதம் எழுதிய கோயில் நிர்வாகம், சுவீகாரம் எடுத்தபோது முத்தையாவுக்கு புள்ளிவரியாக எம்ஏஎம் செலுத்தி இருந்த ரூ.25-யும் திருப்பி அனுப்பி இருந்தது. (இதை நம்மிடம் அப்போதே நேரில் ஆதாரத்துடன் விளக்கி இருக்கிறார் எம்ஏஎம்).

இந்த நிலையில், 2015 டிசம்பரில் எம்ஏஎம் காலமானார். அப்போது அவருக்கு அவரது அண்ணன் மகன் அண்ணாமலைதான் இறுதிச் சடங்குகள் செய்தார். அதேசமயம், முத்தையா கேட்டுக்கொண்டதன் பேரில் மீண்டும் இளையாத்தங்குடி கோயில் அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் (தீர்மானம் எண்557) நிறைவேற்றி மீண்டும் அவரைகோயில் புள்ளியாகச் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால், முத்தையாவை மீண்டும் சேர்த்தது விதி மீறல் என எம்ஏஎம்-மின் அண்ணி குமார ராணி மீனா முத்தையாவும், எம்ஏஎம்-மின் உறவினரும் ஸ்பிக் குழும தலைவருமான ஏ.சி.முத்தையாவும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

புதிதாக பொறுப்பெற்ற இளையாத்தங்குடி கோயில் அறங்காவலர் குழுவானது இவர்களின் ஆட்சேபனை குறித்து பரிசீலனை செய்தது. இதுதொடர்பாக கடந்த 9.10.22 அன்று நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில், ‘‘எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவின் சுவீகாரம் சட்டத்துக்குப் புறம்பாக இருப்பதாலும் நமது நகரத்தார்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாட்டுக்கு எதிராக இருப்பதாலும் மேற்கண்ட தீர்மானம் 557 (முத்தையாவை மீண்டும் பட்டிணசாமி பிரிவில் புள்ளியாக சேர்த்துக்கொண்ட தீர்மானம்) ரத்து செய்யப்படுகிறது’’ என தீர்மானம் நிறைவேற்றியதுடன், ‘‘மீண்டும் புள்ளியில் சேர்த்துக்கொண்டது தொடர்பாக நகரத்தார்களின் மற்ற 8 கோயில் நிர்வாகத்திடமும் இளையாத்தங்குடி கோயிலின் 7 உட்பிரிவினரிடமும் முத்தையா ஒப்புதல் பெற்று வரவேண்டும். அதுவரைக்கும் இடைப்பட்ட காலத்தில் தீர்மானம் எண் 541 (முத்தையாவை பட்டிணசாமி பிரிவு புள்ளியிலிருந்து ரத்து செய்த தீர்மானம்) மீண்டும் அமல்படுத்தப்படுகிறது’’ எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முத்தையாவை புள்ளியிலிருந்து நீக்கியதால் அவருக்காக ஆயுள் சந்தாவாக (2-வது முறையாக செலுத்தப்பட்ட புள்ளி வரி) செலுத்தப்பட்ட 151 ரூபாயையும் முத்தையாவின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டது கோயில் நிர்வாகம். இந்த விவரங்கள் அனைத்தையும் குமார ராணி மீனா முத்தையாவுக்கும், ஏ.சி.முத்தையாவுக்கும் கடந்த 11-ம் தேதி கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறது கோயில் நிர்வாகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்