மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட இடிப்பின் திகில் அனுபவம்: ஒப்பந்ததாரர் பொன்லிங்கம் சிறப்பு பேட்டி

By டி.செல்வகுமார்

மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் வெடிக்காத வெடிபொருள் எதுவும் இல்லை. அதுபற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று இக்கட்டிட இடிப்புப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பொன்லிங்கம் கூறியுள்ளார்.

மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட திருப்பூர் மேல்லிங்க் இன்ப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் பி.பொன்லிங்கம் இப்பணியின் போது சந்தித்த இடர்பாடுகள் மற்றும் திகில் நிறைந்த அனுபவங்களை ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண்டார்.

மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் மற்ற கட்டிட இடிப்புத் திட்டங்களைவிட எந்தவகையில் மாறுபடுகிறது?

இந்த 11 மாடி கட்டிடம் பாது காப்பு இல்லாத கட்டிடமாக இருந் தது. அதாவது தாங்குதிறனைக் காட்டிலும் அதிக எடை கொண்ட கட்டிடமாக காணப்பட்டது. அதனால் மற்ற திட்டங்களைக் காட்டிலும் இது இடர்பாடு மிகுந்ததாக இருந்தது.

கட்டிடம் மிகவும் பழையதாகி விட்டால் அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக இடிக்கச் சொல்வார்கள். அப்போது அந்தக் கட்டிடம் வலுவானதாகவே இருக்கும். ஆனால், மவுலிவாக்கம் கட்டிடம் அப்படியில்லை. வலுவற்றதாக இருந்ததால் கூடுதல் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டியிருந்தது.

இந்த கட்டிடத்தை இடிக்கும்போது எந்த மாதிரியான இடர்பாடுகளை எதிர்கொண்டீர்கள்?

அளவுக்கு அதிகமான எடை கொண்ட கட்டிடமாக இருந்ததால் ஆபத்து அதிகம் இருந்தது. அதனால் ஒவ்வொரு முறை கட்டிடத்துக்குள் போய்வரும்போதும் உயிரோடு திரும்பி வருவோமா என்ற அச்சம் இருந்தது. எனவே, முதலில் சில நபர்களை மட்டும் உள்ளே அனுப்பி கட்டிடத்தின் அதிக எடையைக் குறைக்க நடவடிக்கை எடுத்தோம். ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால் உயிர்பலி குறைவாக இருக்கும் என்பதால் மிகச் சிலர் மட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களும் மிகுந்த எச்சரிக்கையோடு பணியாற்றினார்கள். மற்ற திட்டங்களில் இதுபோன்ற அச்சம் இருந்ததில்லை.

கட்டிடத்தில் எவ்வளவு எடையைக் குறைத்தீர்கள்?

சுமார் 500 டன் எடையைக் குறைத்த பிறகு கட்டிடம் சற்று வலுவானது. 100 கிலோ எடையோடு ஒருவர் நிற்கும்போது நீண்டநேரம் நிலையாக நிற்க முடியாது. அதுவே 50 கிலோ எடையைக் குறைத்தால் நிலைத்தன்மை அதிகரித்து சற்று நிலையாக நிற்க முடியும். அதுபோன்ற ஸ்திரத்தன்மையை மவுலிவாக்கம் கட்டிடத்தில் ஏற்படுத்தினோம். இந்தப் பணிக்காக மட்டும் 60 நாட்கள் வரை ஆனது. ஏனென்றால் ஒரே நேரத்தில் 100, 200 பேரைக் கொண்டு கட்டிட பளுவைக் குறைக்கும் நிலையில் அந்த கட்டிடம் இல்லை. அதனால் 4, 5 பேர் மட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்க என்ன செய்தீர்கள்?

கட்டிடத்தை வலுவாக்க முடியாது. எங்கெல்லாம் அதன் ஸ்திரத்தன்மை குறைவாக இருந்ததோ அங்கெல்லாம் தற்காலிக இரும்பு பாளங்களைக் கொண்டு முட்டுக் கொடுத்தோம். கட்டிடத்தின் ஒருபக்கம் பள்ளிக்கூடம், மறுபக்கம் வீடுகள் இருந்ததால் அந்த பக்கத்தை அப்படியே விட்டுவிட்டு, மற்ற பகுதியில் கட்டிடத்தின் வலுவைக் குறைத்தோம்.

கட்டிட இடிப்புக்குத் தேவையான வெடிபொருளின் அளவு எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

இது கட்டிடத்துக்கு கட்டிடம் வேறுபடும். கட்டிடம் கட்டி எவ்வளவு வருடம் ஆகிறது, அதில் எந்த மாதிரி கான்கிரீட் டைப் பயன்படுத்தியிருக்கிறார் கள், அதன் கலவை எந்த விகிதாச்சாரத்தில் உள்ளது, இரும்புக் கம்பிகள் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையெல்லாம் கணக்கிட்ட பிறகே எவ்வளவு வெடிபொருள் வைத்து தகர்க்க வேண்டும் என்பது முடிவு செய்யப்படும். மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடத்தில் போதுமான எண்ணிக்கையில் தூண்கள் இல்லை. கட்டிடம் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம்.

கட்டிட இடிப்புக்கான செலவு எவ்வளவு? மொத்த வேலை நாட்கள், மொத்த வேலையாட்கள்?

மவுலிவாக்கத்தில் ஏற்கெனவே 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்திருந்ததால் இந்த கட்டிடமும் விழுந்துவிடுமோ என்ற அச்சம் மக்களிடம் அதிகமாக இருந்தது. இக்கட்டிடம் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் நாங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கட்டிட இடிப்புக்கு ரூ.50 லட்சம் செலவானது. சுமார் 7 மாதங்கள் நடைபெற்ற இப்பணியில் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆயிரம் பேர் பணியாற்றினர்.

தமிழ்நாட்டில் இதுபோல எத்தனை திட்டங்களை நிறைவேற்றி யுள்ளீர்கள்?

உள்நோக்கி விழும் நவீன தொழில்நுட்பத்தில் தமிழகத்தில் இடித்த கட்டிடங்களில் மவுலி வாக்கம் கட்டிடம்தான் பெரியது. ஊட்டியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவத்துக்காக கட்டப்பட்டு பழையதாகிவிட்டதால் பயன்படுத்தாமல் இருந்த பிளாக் பிரிட்ஜ்ஜை உடைக்கவே முடியாததால், வெடிவைத்து தகர்த்துக் கொடுத்தோம். அதில் ஒரு தூண் மட்டும் 60 முதல் 70 அடி வரை ஆற்றுக்குள் கட்டப்பட்டிருந்தது. திருப்பூரில் தலா 4.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலைத் தொட்டிகள், திருச்செங்கோட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி ஆகியவற்றை இடித்து தகர்த்தோம்.

கடந்த செப்டம்பர் 25-ம் தேதி கட்டிட இடிப்பை ஏன் தள்ளி வைத்தீர்கள்?

செப்டம்பர் 25-ம் தேதி பருவ நிலையில் மாற்றம் இருந்ததால் அதைத் தள்ளிவைத்தோம். இடியுடன் கனமழை பெய்தால் கட்டிடத்தை இடிப்பது மிகவும் சிரமம். ஒருகட்டத்துக்கு மேல் இடிப்புப் பணியை நிறுத்த முடி யாமல் போய்விடும். வெடிபொருட் களை நிரப்பி மின் இணைப்பு கொடுத்துக் கொண்டிருக்கும்போது கட்டிடத்தை மின்னல் தாக்கினால் பாதிப்பு அதிகமாகிவிடும். மின் இணைப்பு கொடுத்து முடித்துவிட்டு நாம் வெளியேறிவிட்டால் அப்போது மின்னல் தாக்கி இடிந்து விழுந்தால் பாதிப்பு ஏற்படாது. நவம்பர் 2-ம் தேதியும் பருவநிலை மாற்றத்தால் சற்று தாமதம் ஏற்பட்டது.

கட்டிட இடிப்புக்குப் பிறகு அப் பகுதியில் வெடிக்காத வெடிபொருள் இருக்குமோ என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கிறதே?

அதுபோன்ற வெடிக்காத வெடிபொருட்கள் ஏதும் இல்லை. அதை ஆய்வு செய்து உறுதிப்படுத்திவிட்டோம். யாரும் அச்சப்படத் தேவையில்லை. மவுலி வாக்கம் கட்டிடத்தில் 56 தூண்களில் வெடிபொருள் வைத்தோம். அதற்கிடையே கொடுக்கப்பட்ட மின் இணைப்புகளில் ஓர் இடத்தில் பிரச்சினை இருந்தாலோ, அல்லது ஓர் இடத்தில் வெடிப்பொருள் வெடிக்காவிட்டால் கூட மொத்த இடிப்புப் பணியும் தடைபட்டுவிடும். அனைத்து இடங்களில் வைக்கப்பட்ட வெடிபொருட்களும் ஒன்றுவிடாமல் வெடிக்கும் வகையிலே இந்த தொழில்நுட்பம் இருப்பதுதான் விசேஷம்.

எங்களது 20 வருட கட்டிட இடிப்பு தொழில் அனுபவத்தில் மவுலிவாக்கம் கட்டிட இடிப்பு பணியை வெற்றிகரமாக முடித்தது ஒரு மைல்கல்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்