இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் | மாதவரத்தில் 1.4 கி.மீ. தொலைவு சுரங்கம் தோண்டும் பணி - முதல்வர் தொடங்கிவைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-வது வழித்தடத்துக்காக, மாதவரத்தில் 1.4 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

மொத்தம் ரூ.63,246 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில், 118.9 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது.

மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ.க்கும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கி, மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவிக்காக அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கும்வரை, தற்காலிகமாக மாநில அரசு திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 வழித்தடங்களில், பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சுரங்கம் தோண்டும் பணிக்காக, 23 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், மாதவரம் பால் பண்ணை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, மாதவரம் நெடுஞ்சாலை நிலையம் வரை 1.4 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

தமிழக அரசின் நிர்வாக ஒப்புதலின் அடிப்படையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில், உயர்த்தப்பட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்காக 7 ஒப்பந்தங்கள், சுரங்கப்பாதை வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்காக 10, மாதவரம், பூந்தமல்லி பணிமனைகளுக்காக 2, இருப்புப்பாதை அமைப்பதற்காக 5 என மொத்தம் 24 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மூன்றாவது வழித்தடத்தில், மாதவரத்திலிருந்து தரமணி வரையிலான (26.7 கி.மீ.) சுரங்கப்பாதை வழித்தடப் பகுதி, தமிழக அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இதில் இரண்டு சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாதவரம் பால் பண்ணையிலிருந்து கெல்லீஸ் வரையில் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை தோண்டும் பணி மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களுக்கான தடுப்புச் சுற்றுச் சுவர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, கே.ஜெயக்குமார் எம்.பி., திமுக சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலரும், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.சுதர்சனம், சட்டப்பேரவை உறுப்பினர் துரை.சந்திரசேகர், துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் எம்.ஏ.சித்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்