கோவில்பட்டி: தீப்பெட்டிக்கான மூலப்பொருட்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கடலையூர், தென்காசி மாவட்டம் திருவேங்கடம், குருவிகுளம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், வேலூர் மாவட்டம் குடி யாத்தம், தர்மபுரி மாவட்டம் காவிரிபட்டினம் ஆகிய இடங்களில் 400 இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், 90 சதவீதம் பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
மூலப்பொருட்கள் விலை உயர்வு: இந்நிலையில், தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் அடக்கச் செலவு அதிகரித்து விற்பனை விலை கிடைக்காத நிலையில், கடந்த ஆண்டு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் டிச.1-ம் தேதி முதல் சுமார் 80 குச்சிகள் கொண்ட தீப்பெட்டியின் விலையை 14 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1-ல் இருந்து ரூ.2 ஆக உயர்த்தினர். ஆனால், மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்கள், தீப்பெட்டி விற்பனைக்கு சவாலாக உள்ளது.
ஏற்கெனவே வாரத்தில் 4 நாட்கள் தான் தொழிலாளர் களுக்கு வேலை வழங்கப்படு கிறது. மின் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வால் லாரி வாடகை அதிகரிப்பு, தொழிலாளர்கள் சம்பள உயர்வு என அடுத்தடுத்து ஒவ்வொரு பிரச்சினையாக வருவதால் உற்பத்தியாளர்கள் தீப்பெட்டி தொழிலை சீராக கொண்டு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து நேஷனல்சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறும்போது, ‘தீப்பெட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களான அட்டை, குச்சி,பேப்பர், மெழுகு, குளோரேட், சிகப்பு பாஸ்பரஸ் போன்றவை மாதந்தோறும் விலை உயர்ந்துவருகிறது. அதனால் தீப்பெட்டியின் அடக்கச் செலவுக்கு ஏற்ப சந்தையில் விற்பனை விலை கிடைக்கவில்லை. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
தீபெட்டி விற்பனை பாதிப்பு: மேலும், கடந்த ஆண்டு முதல் வடமாநிலங்களில் லைட்டர்களை ரூ.7 முதல் ரூ.12 விரை விற்பனை செய்து வருகின்றனர். ஒரு லைட்டர் 20 தீப்பெட்டி விற்பனையை பாதிக்கும். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவில்பட்டி வந்த போது, அவரது கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர் உடனடியாக வெளிநாடுகளில் இருந்து லைட்டர்களை இறக்குமதி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சருக்கு, கடிதம் மூலம் வற்புறுத்தினார். ஆனால், இன்று வரை மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
தற்போது தீபாவளி சீஸன்தொடங்கிவிட்டதால், வடமாநில வியாபாரிகள் பட்டாசு கொள்முதலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால்தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பழைய பாக்கித் தொகையை அவர்கள் அனுப்பவில்லை. புதிதாக ஆர்டர்களும் கொடுக்கவில்லை. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். வெள்ளை குச்சி தயாரித்தல், பிரிண்டிங் மற்றும் ஸ்கிரீன் ஸ்கோரிங் உள்ளிட்ட தீப்பெட்டிசார்பு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க தீப்பெட்டி உரிமையாளர்கள் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் வட்டிக்கு பணம் கேட்டுள்ளனர். எனவே, தமிழக அரசுசிட்கோ மூலம் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் மூலப்பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்’’, என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago