‘கோயில்கள் வியாபாரத்துக்கான இடமல்ல’ - உயர் நீதிமன்றம் கருத்து

By கி.மகாராஜன்

மதுரை: ‘கோயில்கள் வழிபாட்டுக்குரிய இடமாகும். வியாபாரத்துக்கான இடமல்ல’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்கள், மடங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில்களுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் காணிக்கைகளை செலுத்தி அதற்காக ரசீது பெற்று செல்கின்றனர்.

வெளிநாடுகள், வெளி மாவட்டங்களில் இருக்கும் பக்தர்கள் கோயில் இணையதளம் வழியாக வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்துகின்றனர். இதை பயன்படுத்தி தனி நபர்கள் கோயில் பெயரில் இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.

எனவே, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் மற்றும் மடங்களின் பெயரில் செயல்படும் போலி இணையதளங்களை முடக்கவும், அந்த இணையதளங்களை நடத்துவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கோயில் பெயர்களில் தனி நபர்கள் நடத்திவந்த இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கோயில் கோயிலாகவே இருக்க வேண்டும். கோயில் வழிபாட்டிற்கான இடம் தான். வியாபாரத்துக்கான இடம் அல்ல. கோயில் மக்களுக்கானது. சிலருக்கானது அல்ல. இந்த வழக்கில் ஏடிஜிபி (சைபர் கிரைம்) மற்றும் மத்திய அரசும் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறது. விசாரணை அக். 26-க்கு ஒத்திவைக்கப்படுகிறது." என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE