‘பாரதியார் இன்று இருந்திருந்தால் நீதித்துறைக்கு எதிராக வெகுண்டு எழுந்திருப்பார்’ - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு

By கி.மகாராஜன்

மதுரை: ‘பாரதியார் இன்று இருந்திருந்தால் நீதித்துறைக்கு எதிராக வெகுண்டு எழுந்திருப்பார்’ என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசினார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எம்எம்பிஏ சார்பில் பாரதி விழா மற்றும் கவிதைப் போட்டி இன்று எம்எம்பிஏ தலைவர் ஸ்ரீநிவாச ராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில், ‘பாரதி இன்று இருந்திருந்தால்’ என்ற தலைப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:

தமிழர்கள் பாரதியை மறக்கவில்லை. பாரதியை பற்றிய பேச்சும், நினைப்பும் அதிகரித்து வருகிறது. பாரதி கவிஞர், புரட்சியாளர், ஞானி என்ற மூன்று முகங்களை கொண்டவர். தனது கொள்கையை நிலை நாட்ட யாரையும் எதிர்கொள்ளும் ஆன்மபலம் கொண்டவராக இருந்தார்.

பாரதியை போல் ஒருவர் சாதியை சாடியிருக்க முடியாது. சுயசாதி மறுப்பு தான் சாதி மறுப்பின் முதல் அடையாளம். அதை வாழ்ந்து காட்டியவர் பாரதி. அப்படியிருந்தும் இன்றைய சமூகச் சூழலில் இன்றைக்கு இருக்கும் கட்டமைப்பில் பாரதியை அவர் பிறந்த குலத்தை தாண்டி அவரை பார்க்க முடியுமா? பாரதி பிறப்பால் ஒரு இந்து. ஆனால் அவர் இந்து என்பதற்கான சாயலை அவரிடம் காண முடியாது.

இப்போது நிலவும் கட்டமைப்பில் பாரதியை இந்து என்ற வட்டத்தை தாண்டி அவரது வார்த்தைகளை உள்வாங்கும் நிலையில் உள்ளோமோ? அல்லது பாரதிக்கு காவி உடை அணிவித்து இந்து முத்திரை குத்திவிடுவோமோ?

பாரதியின் கண்களில் விடுதலை என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவது மட்டும் அல்ல, பெண், ஜாதி, ஏற்றத்தாழ்வு, தனிமனித விடுதலையாக இருந்தது. அதற்காக போராடியவர் அவர். பாரதி இன்று இரு்ந்திருந்தால் அரசியல், பணம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு விரைவில் கிடைக்கும் நீதி, சாதாரண மக்களுக்கு கிடைக்காமல் போவது, நீதித்துறையில் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார்.

சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ள இந்த காலத்தில் வெகுண்டு எழுந்திருப்பார். அவருக்கு எதிரான வழக்குகளுக்கு தனி நீதிமன்றம் அமைத்திருப்பார்கள். வாழ்நாளில் பாதியை சிறையில் தான் கழித்திருப்பார். இவ்வாறு அவர் பேசினார். விழா முடிவில் எம்எம்பிஏ அமைப்பின் பொதுச்செயலாளர் கே.பி.நாராயணகுமார் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE