ஜெயலலிதா சிலைக்கு மரியாதை; மனுவை வாங்க யாரும் இல்லை: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: "சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதி கோரி மனு அளிக்க வந்தேன், சந்திக்க நேரம் கொடுத்துவிட்டு மனுவை வாங்க யாரும் இல்லை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "அதிமுக ஆட்சியின்போது உயர்கல்வி மன்ற வளாகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்பட்டு தினந்தோறும் மாலை அணிவிக்கப்பட்டது.

ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, யாரையும் உள்ளே அனுமதிக்காமல், அதனை பூட்டிவிட்டனர். நாங்கள் பராமரித்துக் கொள்வதாக அனுமதி கோரி கடிதம் கொடுத்தோம். ஆனால் அனுமதிக்க மறுத்துவிட்டனர். வரும் 17-ம் தேதி, அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்.

அதற்கு அனுமதி வழங்க கோரியும், சிலையை சுற்றி பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி கோரி நிர்வாகப் பொறியாளரிடம் பேசினேன். 12 மணிக்கு வரச்சொன்னார். நானும் வந்துவிட்டேன். ஆனால் அவர் இருக்கையில் இல்லை. எங்கே சென்றார் எனத் தெரியவில்லை. முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர், ராயபுரம் தொகுதியில் 5 முறை எம்எல்ஏ, என்னால்கூட நிர்வாகப் பொறியாளரை சந்திக்க முடியவில்லை என்றால், இந்த ஆட்சியில் நிலைமை எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE