சென்னை: "தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை வரும் 17-ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டப் பேரவை கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்; அதற்கு கால அவகாசம் இல்லை என்றால், கூட்டத் தொடருக்கு பிறகு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். மத்திய அரசும் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கேரள மாநிலம் எலந்தூர் கிராமத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் உட்பட இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், இந்த கொடுமை அரங்கேற்றப்பட்டிருப்பதை பார்க்கும் போது மனித குலம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பகவல் சிங் - லைலா இணையருக்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சரி செய்வதாகவும், அவர்களுக்கு மீண்டும் பொருளாதார வலிமையை ஏற்படுத்தி தருவதாகவும் கூறி முகமது சாபி என்ற மாந்திரீகர் இரு பெண்களை கடத்தி வந்து நரபலி கொடுத்துள்ளார். ரோஸ்லின், பத்மா ஆகிய இரு பெண்களும் வெவ்வேறு காலகட்டத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாகவும், பொது மக்கள் முன்னிலையிலேயே இந்த கொடூரச் செயல் நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்தி தான் நடுங்கவைக்கிறது. இரு பெண்களில் முதலில் பலி கொடுக்கப்பட்ட ரோஸ்லின் என்ற பெண்ணின் உடல் உறுப்புகளை மாந்திரீகர் சமைத்து சாப்பிட்டதாக முதற்கட்ட செய்தி கிடைத்து இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல்கள் பெரும் அருவருப்பை ஏற்படுத்துகின்றன.
அறிவியலிலும், கல்வியிலும் முன்னேறிய மாநிலமான கேரளத்தில் இந்த கொடுமை நிகழ்ந்திருப்பதைத் தான் சகித்துக் கொள்ள முடியவில்லை. இன்றைய சூழலில் மனதில் எழும் பெரும் கவலை என்னவெனில், இத்தகைய நரபலிகளும், பிற மூடநம்பிக்கைகளும் தொடர்கதையாகி விடக்கூடாது என்பது தான். நரபலி போன்ற மூட நம்பிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒருபுறமிருக்க, சட்டத்தின் மூலம் இத்தகைய பிற்போக்குத் தனங்களுக்கு முடிவு கட்ட துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
» ’பாஜகவின் வளர்ச்சி முதல்வர் ஸ்டாலினுக்கு பயத்தைக் கொடுத்துள்ளது’ - அண்ணாமலை
» ஐ.நா. அரங்கில் காஷ்மீர் பிரச்சினை: அற்பமாக நடப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
மூட நம்பிக்கைகள் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் இன்னொரு உண்மை என்னவெனில், இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்ற முன்னேறிய மாநிலங்களான தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டங்கள் எதுவும் இயற்றப்படவில்லை என்பது தான். இதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. கேரளத்தில் 2006-ஆம் ஆண்டில் அச்சுதானந்தன் தலைமையிலான இடது சாரி ஆட்சியின் போதும், 2014-ஆம் ஆண்டு உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போதும் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் இயற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
மூட நம்பிக்கைகளை அனுமதிப்பதும், அவற்றை வேடிக்கை பார்ப்பதும் மனிதகுலத்திற்கு எதிரானவை. அறிவியலின் வழி நடக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல், மனித நேயம், எதையும் அப்படியே நம்பாமல் விசாரித்து அறியும் தன்மை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 51 ஏ(எச்) கூறுகிறது. இதை சாத்தியமாக்க மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்படுவது அவசியம் ஆகும். ஆனால், பிற்போக்கு வாதம் பேசும் மாநிலங்கள் என்று கூறப்படும் கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் கூட இத்தகைய சட்டம் இயற்றப்பட்டு விட்ட நிலையில், தமிழகத்தில் சட்டம் இயற்றப்படாதது தவறு ஆகும்.
கேரளத்தைக் கடந்து நரபலி உள்ளிட்ட மூட நம்பிக்கைகள் அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சாவூர் மல்லிப்பட்டினத்தில் தாத்தாவின் உடல்நிலை சரியாக வேண்டும் என்பதற்காக 6 மாத பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து நரபலி கொடுத்த கொடுமை நடந்தது. நரபலி மட்டுமே மூட நம்பிக்கை அல்ல. பில்லி சூனியம் வைத்தல், பேய் ஓட்டுதல் போன்ற செயல்களும் அந்த வகையைச் சேர்ந்தவை தான். அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத அனைத்தும் மூட நம்பிக்கைகள் தான். மூட நம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களும், பெண்களும் தான். சமூக வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயனளிக்காத, பிற்போக்குத்தனத்தை திணிப்பதற்கு மட்டுமே பயன்படும் மூட நம்பிக்கை தமிழ்நாட்டில் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்.
அதற்காக தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை வரும் 17-ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டப் பேரவை கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்; அதற்கு கால அவகாசம் இல்லை என்றால், கூட்டத் தொடருக்கு பிறகு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். மூட நம்பிக்கையை நாடு தழுவிய அளவிலும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால் மத்திய அரசும் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago