சென்னை: "முதல்வருக்கு இரண்டு விதமான பயம் வந்திருக்கிறது. ஒன்று அவருடைய கட்சியில் யார் என்ன செய்வார்கள்? எப்போது செய்வார்கள்? எப்படி செய்வார்கள்? என்பது புரியாமல் ஒரு பயத்தில் இருக்கிறார். இரண்டாவது பயம் பாஜகவின் வளர்ச்சி" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், மத்திய அரசு இந்தியை மீண்டும் திணிக்க முயற்சிப்பதாக ஆளுங்கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், குற்றம்சாட்டுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நானும் ஒரு 4,5 நாட்களாக தமிழகத்தில் இருக்கின்ற ஆளுங்கட்சி குறிப்பாக திமுகவின் செயல்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எப்போதெல்லாம் மக்களுக்கு ஆட்சியின் மீது கோபம் வருகிறதோ, அப்போதெல்லாம் திமுக தானாக தவறுகளை செய்து மக்கள் மன்றத்தில் தனக்கு ஒரு அவப்பெயர் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த இந்தி என்ற விஷயத்தை கையில் எடுப்பார்கள். இது புதிததல்ல. 70 ஆணடுகளாக தமிழக மக்கள் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் திமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் பேசியதை நாம் கேட்டோம். பாஜக என்ற கட்சியே தமிழகத்தில் இல்லவே இல்லை என்று 5 ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய ஸ்டாலின், இன்று பாஜக தங்களது முதல் எதிரியாக அவராகவே அறைகூவல் விடுத்துள்ளார். அதை பார்க்கும்போதே பாஜக தமிழகத்தில் தமிழக மக்கள் மனதில் வளர்ந்து கொண்டிருப்பது தெரியும்.
எப்போதும் இல்லாத அளவுக்கு முதல்வர் பாஜகவை தாக்கி பேசியிருக்கிறார். ஏதாவது ஒன்றை செய்து 2024-ல் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்று பேசியிருக்கிறார். தமிழக பாஜக மூத்த தலைவர்கள், என்னிடம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் முதல்வரின் பேச்சு பாஜகவை சுற்றியே இருந்ததாக தெரிவித்தனர். அதை பார்க்கும்போது அவருக்கு எந்தளவுக்கு பயம் தொற்றியுள்ளது என்பது புரிகிறது.
முதல்வருக்கு இரண்டு விதமான பயம் வந்திருக்கிறது. ஒன்று அவருடைய கட்சியில் யார் என்ன செய்வார்கள்? எப்போது செய்வார்கள்? எப்படி செய்வார்கள்? என்பது புரியாமல் ஒரு பயத்தில் இருக்கிறார். இரண்டாவது பயம் பாஜகவின் வளர்ச்சி. இந்த இரண்டும் சேர்ந்து முதல்வருக்கு தூக்கத்தைக் கெடுக்கின்றது என்று அவர் சொல்லியிருப்பதாக செய்தியை நான் அறிந்தேன்.
அதனுடைய தொடர்ச்சியாக இந்தியை வைத்து மீண்டும் ஒரு மொழிப்போர் என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார். காங்கிரஸ் இந்தியை திணிக்க முயன்றபோது, அதை ஒரு அரசியல் வாய்ப்பாக பயன்படுத்தி திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது அனைவருக்கும் தெரியும். அதன்பிறகு, இந்தியை திணித்த காங்கிரஸ் கட்சியுடன் பல ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்துள்ளனர்.
மும்மொழிக் கொள்கைதான் பாஜக அரசின் கருத்து. மூன்றாவது மொழி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அது தெலுங்கு, கன்னடம், மராட்டி என்று எதுவாகவும் இருக்கலாம். அலுவல் மொழிக்கான குழு ஒரு அறிக்கை கொடுத்திருப்பதாக அறிகிறேன். அந்த அறிக்கையை நான் இன்னும் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதில் 3 பிரிவுகள் உள்ளன. இந்தியை முழுமையாக பயன்படுத்துகிற மாநிலங்கள் "ஏ" பிரவாகவும், பாதியளவு பயன்படுத்துகிற மாநிலங்கள் "பி" பிரிவாகவும், பயன்படுத்தாத மாநிலங்கள் "சி" பிரிவாகவும் பிரித்துள்ளனர். தமிழகம் "சி" பிரிவைச் சேர்ந்த மாநிலம்.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், 6-ம் வகுப்பு வரை பயிற்றுமொழி தமிழாகத்தான் இருக்கும். இதை புதிய கல்விக் கொள்கையில் மிக தெளிவாக கூறியிருக்கிறோம். அட்டவணை 8-ல் இருக்கக்கூடிய மொழிகள்தான் இந்தியாவின் அதிகாரபூர்வமான மொழிகள். இந்தியாவில் நடத்தக்கூடிய எந்த தேர்வுகளும் இந்த 8-வது அட்டவணையில் உள்ள மொழிகளில்தான் நடத்த வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. எந்தவொரு குழுவும் வித்தியாசமான அறிக்கையும் கொடுக்கவில்லை. எனவே இல்லாத ஒரு புரளியைக் கிளப்பி, ஆளும்கட்சியான திமுகவின் மீது மக்களுக்கு இருக்கும் அபிப்பராயம், கோபம், இதையெல்லாம் மறைப்பதற்கு திமுக கபட நாடகம் ஆடுகிறது" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago