மகனுக்கு சாதி சான்றிதழ் பெறமுடியாததால் விரக்தி - நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் மரணம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஐந்து ஆண்டுகளாகப் போராடியும், தனது மகனுக்கு பழங்குடி இனத்தவர் (எஸ்.டி.) சாதிச் சான்றிதழ் பெறமுடியாத விரக்தியில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சேர்ந்தவர் வேல்முருகன்(49). தொழிலாளியான இவருக்கு மனைவி சித்ரா, 10-ம் வகுப்பு பயிலும் ஒரு மகன் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்த வேல்முருகன், திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி, தீவைத்துக் கொண்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தீயை அணைத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை வேல்முருகன் உயிரிழந்தார். இது தொடர்பாக சென்னை எஸ்பிளனேடு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேல்முருகன் உடலை வாங்க மறுத்து நேற்று அவரது உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "பள்ளிக்குச் செல்லும் தனது மகனுக்கு எஸ்.டி. சாதிச் சான்றிதழ் கோரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேல்முருகன் விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்காமல், அதிகாரிகள் வேல்முருகனை அலைக்கழித்து வந்துள்ளனர். இதனால் வேதனையில் இருந்த வேல்முருகன் மனமுடைந்து, தற்கொலை முடிவுக்குச் சென்றுவிட்டார். குறவர் சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் மலைக்குறவர் என்ற சான்றிதழ் வழங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழகத்துக்கு குடிபெயர்ந்த வடமாநிலத்தவருக்கும், நரிக்குறவர் என்ற சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதால், தமிழக குறவர்களின் அடையாளம் முற்றிலும் அழிக்கப்படுகிறது. எனவே, மலைக்குறவர் சமூகத்துக்கு ஒரேவிதமான சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்துக்கு, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், அவரது மனைவி சித்ராவுக்கு, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அவரது பிள்ளைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். அவரது மகனின் படிப்புச் செலவை அரசே ஏற்க வேண்டும்" என்றனர்.

தாமாக முன்வந்து வழக்கு

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது.

வழக்கறிஞர் எஸ்.சூர்யபிரகாசம், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பாக ஆஜராகி, "சாதிச் சான்றிதழுக்காக நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இறந்தவரின் மகனுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கி விட்டனரா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா? இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்காக எடுத்து, விசாரிக்க வேண்டும்" என்று முறையீடு செய்தார்.

அதை ஏற்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த சம்பவம் தொடர்பான வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

பின்னர், "தனது மகனின் சாதிச் சான்றிதழுக்காக அதிகாரிகளிடம் மன்றாடிப் பார்த்த நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், மனம் வெறுத்து, உயர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றால், அதை சாதாரண விஷயமாகப் பார்க்க முடியாது.

அவரது மகனுக்கு என்ன காரணத்துக்காக அதிகாரிகள் சாதிச் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளனர் என்பதை இந்த நீதிமன்றம் அறிய விரும்புகிறது. அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெற சாதிச் சான்றிதழ்தான் முக்கியம். அப்படி இருக்கும்போது, அதிகாரிகள் ஏன் அவரை அலையவிட்டுள்ளனர். எதற்காக அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறித்து தமிழக அரசு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி முன்பாக பட்டியலிட, உயர் நீதிமன்றப் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்