மத்திய நீர்வள ஆணையம் அனுமதித்தால் மட்டுமே காவிரியில் மேகேதாட்டு அணையை கட்ட முடியும்: சேலத்தில் மத்திய இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் விளக்கம்

By செய்திப்பிரிவு

சேலம்: மத்திய நீர்வள ஆணையம் ஆய்வு செய்து அனுமதி அளித்தால் மட்டுமே, காவிரியில் மேகேதாட்டு அணையை கட்ட முடியும், என்று மத்திய இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் தெரிவித்தார். சேலத்தில், சீர் மிகு நகரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் இரண்டடுக்கு பேருந்து நிலையம் உள்பட சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மத்திய ஜல்சக்தி துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கி வருகிறது. ஜல் ஜீவன் திட்டத்துக்கு, 2019 முதல் 2022-ம்ஆண்டு வரை ரூ.1,677 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தூய்மை பாரத இயக்கம் திட்டத்துக்கு ரூ.4,532 கோடி, நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ரூ.44 கோடி, தேசிய ஹைட்ராலஜி திட்டத்துக்கு ரூ.21.60 கோடி என மொத்தம் ரூ.6,281 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு தனது பகிர்ந்தளிப்பு தொகையை சரியான நேரத்தில் ஒதுக்குவதில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியை, தமிழக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை. மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி, தாங்கள் செய்து வருவது போல மாற்றுவதுடன், மத்திய அரசின் நிதியை இதர திட்ட பணிகளுக்கு செலவிடுகிறது.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 53 % வீடுகளுக்கு மட்டுமே இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 2022-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இலக்கு எட்டப்படாததால், 2024-ம் ஆண்டு வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில், மத்திய நீர்வள ஆணையம் ஆய்வு செய்து அனுமதி அளித்தால் மட்டுமே, அணை கட்ட முடியும். தமிழகத்தில் பழங்குடியினருக்கென தனி பல்கலை. அமைப்பது குறித்து மாநில அரசு பரிந்துரைத்தால், அதை மத்திய அரசு பரிசீலிக்கும் என்றார். அப்போது, பாஜக மாநில துணை தலைவர் ராமலிங்கம், முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE