உள்ளாட்சி 52: பள்ளிகளை அதிகாரத்தால் அல்ல... அன்பால் கட்டுப்படுத்துகிறோம்!

By டி.எல்.சஞ்சீவி குமார்

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் ரூ.1000... முதல் மதிப்பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம்...பள்ளிகளைப் பராமரிக்கிறது கல்விக் குழு!

ஒருபக்கம் ஓங்கி வளர்ந்திருக்கிறது குருடிமலை. உற்று நோக்கினால் பாறையே மனித முகமாக தெரி கிறது. காவல் தெய்வம் மல்லாண் டியப்பன் என்று மலையை வணங்குகி றார்கள் மக்கள். இன்னொரு பக்கம் யானையைப் போல படுத்திருக்கிறது அனுவாவி மலை. தூரத்து மலைச் சரிவுகளில் எறும்புகளைப் போல ஊர்கின்றன யானைகள். மலைகளின் இடையே பசுமைப் பள்ளத்தாக்காக பரந்திருக்கிறது கோவை மாவட்டம் 22 நஞ்சுண்டாபுரம் கிராமப் பஞ் சாயத்து. பள்ளி மாணவர்கள் புடைசூழ வரவேற்கிறார் வி.கே.வி.சுந்தரராஜ். முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர்.

ஊருக்குள் பள்ளிக் குழந்தைகளின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட பேனர்கள் கட்டப்பட்டிருக்கின்றன. போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்கள். அதில் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் என்கிற அறிவிப்புகள் அச்சிடப் பட்டுள்ளன. “ஏதேனும் விளையாட்டுப் போட்டியா?” என்றுக் கேட்டேன். “வெளையாட்டுப் போட்டியெல்லாம் ஒண்ணுமில்லீங்க. வருஷம்தோறும் 10-வது, 12-வது வகுப்பு பொதுத் தேர் வுகள்ல முதல் மூணு இடங்களைப் புடிக்கிற புள்ளைங்களுக்கு கொடுக் குற பரிசுத் தொகைங்க இது. அதுபோக 10, 12-வது தேர்ச்சி அடையும் அத்தனைப் பேருக்கும் ரூ.ஆயிரம் பரிசு தர்றோமுங்க. தவிர, 1-வது முதல் 12-வது படிக்குற 900 குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடப் பைகள், நோட்டுகள், பென்சில், பேனா, சீருடை எல்லாமே இலவசம். இந்த வழக்கம் நேத்து இன்னிக்கு இல்லீங்க. பத்து வருஷமா நடக்குது. இதோ இப்ப இருந்தே ஊருக்குள்ள பிரச்சாரத்தை ஆரம்பிச்சிட்டோம்” என்கிறார் சுந்தரராஜ்.

அவர் பிரச்சாரம் என்று சொல் வது தேர்தல் பிரச்சாரம் அல்ல; படிப்புக்கான பிரச்சாரம். இவரது உதவியாளர் ராஜேந்திரன் தலை மையில் இயங்குகிறது கிராமக் கல்விக் குழு. பத்துக்கு மேற்பட தன்னார்வலர்களைக் கொண்ட குழு இது. சுற்றுச்சூழல் மற்றும் கல்வி பணிகளை மாணவர்கள் இடையே மேற்கொள்கிறார்கள். பஞ்சாயத்து சார்பில் ஒரு தொழில் பயிற்சி மையம் நடத்துகிறார்கள். அங்கு கோவை ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் நிறுவனத்துடன் இணைந்து பெண் களுக்கு தையல் உள்ளிட்ட பயிற்சி களை அளிக்கிறார்கள்.

பள்ளி மாணவர்கள் இடையே படிப்பில் ஆரோக்கியமான போட் டியை ஏற்படுத்துவது கல்விக் குழுவின் நோக்கம். குறிப்பாக, 10-வது மற்றும் 12-வது படிக்கும் குழந்தைகளை வருஷம் முழுவதுமே பராமரிக்கிறது கல்விக் குழு. சராசரியாக இங்கு ஆண்டுக்கு 200 மாணவர்கள் 10-வது, 12-வது வகுப்புகளில் படிக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஊக்கப்படுத்துகிறது கல்விக் குழு. சிறப்பாக படிக்கும் குழந்தைக ளுக்கும், படிப்பில் ஆர்வம் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் தனித்தனியாக வகுப்புகள் நடத்துகிறார்கள். சிறப்புத் தேர்வுகளும் உண்டு. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக இங்கு ஒருவர்கூட 10-வது, 12-வது வகுப்பில் தோல்வியடையவில்லை.

“எங்க கிராமத்துல பெரும்பாலான குழந்தைகள் அரசுப் பள்ளிகள்லதான் படிக்குறாங்க. அரசுப் பள்ளிகளைக் கட்டுப்படுத்து அதிகாரம் அதிகார பூர்வமாக பஞ்சாயத்துக்கிட்ட இல்லை தானுங்க. ஆனால், நாங்க அன்பால அந்தப் பள்ளிகளைக் கட்டிப் போட்டுருக்கோமுங்க. ஆசிரியர்கள் நேரத்துக்கு பள்ளிகூடத்துக்கு வந்திரு வாங்க. பெரும்பாலும் விடுப்பு எடுக்குறதில்லை. பள்ளிக்கூடங் களைச் சுத்தமாக பராமரிக்கிறாங்க. எங்க குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி மட்டும் கொடுக்குறது இல்லை. அடிக் கடி அவங்களை அருகே இருக்கிற வனப் பகுதிகளுக்கு அழைச்சிட்டுப் போய் சுற்றுச்சூழல் கல்வியும் கற் பிக்கிறோமுங்க. ‘யானை ஏன் ஊருக்குள் வருதுன்னு’ எங்க குழந்தை களைக் கேட்டுப் பாருங்க. ‘யானை ஊருக்குள்ள வரலை. நாமதான் காட்டுக்குள்ள ஊரை விரிவாக்கம் பண்ணிட்டோம்’னு அவங்க சொல் வாங்க.

இங்கே இருக்கிற ஒவ்வொரு வன உயிரின் முக்கியத்துவத்தையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத் திருக்கிறோம். மண்புழு தொடங்கி மலைப் பாம்பு வரைக்கும் இருக்கிற உயிர்ச் சூழல் சங்கிலி என்னன்னு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோமுங்க.

சுந்தரராஜ் அண்ணன் கடந்த 5 வருஷம் முன்னாடி பஞ்சாயத்துத் தலைவரா ஆனார். பதவியேற்ற முதல் வருஷத்துல இந்த கல்வித் ஊக்கத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது 10-வது, 12-வது முதல் மூணு இடங்களைப் பிடிக்கிற குழந்தை களுக்கு தலா ஐந்தாயிரம், மூவாயிரம், இரண்டாயிரம் ரூபாய் பரிசு கொடுத் தார். கடந்த 2015-16ம் ஆண்டு 10-வது வருஷமாக இந்தத் திட்டம் நடப்பதால் இந்த வருஷத்துலேர்ந்து அந்தத் தொகையை ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம்னு உயர்த்தியிருக்கோமுங்க. எதிர் காலத்தில் தலைவர் பதவியில் இருந்தாலும் சரி, இல்லைன்னாலும் சரி இந்தத் திட்டம் தொடரும். 10-வது, 12-வதோடு நாங்க விட்டுற தில்லை. சிறப்பாக படிக்கும் குழந்தை களைக் கோவையில் பேராசிரியர் கனகராஜ் நடத்திவரும் உயர் கல்வி மையத்தில் சேர்த்து அங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்புகிறோம். மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் பஞ்சாயத்துத் தலைவரின் தனிப்பட்ட நிதியிலேர்ந்து செய்யப்படுதுங்க...” என்கிறார் கல்விக் குழுவை நிர் வகிக்கும் ராஜேந்திரன்.

வனப் பகுதியை ஒட்டியே அமைந்திருக்கிறது நஞ்சுண்டாபுரம் கிராமம். இதனால், ஊருக்குள் யானை நடமாட்டம் சர்வ சாதாரணம். குருடி மலையில் இருந்து அனுவாவி மலைக்கும் அனுவாவி மலையில் இருந்து குருடி மலைக்கும் யானை கள் வலசை செல்கின்றன. இதனால் வனத்துறையுடன் இணைந்து மலையடிவாரங்களில் சிறு பண்ணைக் குட்டைகளைக் கட்டியி ருக்கிறது பஞ்சாயத்து. இவை தவிர சங்கனூர் பள்ளம், மூலகங்கல் பள்ளம் ஆகிய இரு ஓடைகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. யானையின் உணவாதாரத்துக்காக மலையடிவாரங்களில் சோளம் பயிரிடப்படுகிறது. அதையும் தாண்டி வரும் யானைகளைப் பெரும்பாலும் மக்கள் விரட்டுவதில்லை. மின் வேலிகளும் கிடையாது.

பரிசு பெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுடன் பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்டோர். உள்படம்: வி.கே.வி.சுந்தர ராஜ் (கோப்புப் படங்கள்)

“மின் வேலி எல்லாம் தப்புங்க. நஷ்டம்தான் அதிகமாகும். அதுல சின்னதா ஷாக் அடிக்கும்போது யானைகளுக்கு கோபம் வருமுங்க. அதனால்தான் பயிர் அத்தனையும் நாசமாக்கி போடுதுங்க. இதோ என் வாழைத் தோட்டத்துல மின் வேலி கிடையாது. போன வாரம் வந்த யானைங்க ஒரு மரத்தைக்கூட இடிக்காம உள்ளே புகுந்து வாழைத் தாரை பிய்ச்சி பக்கத்து மரத்துல அழகா சாய்ச்சி வெச்சிருச்சிங்க. அப்புறமா இலைகளைப் பறிச்சி அதுக்கு பக்கத்திலேயே வெச்சிடுங்க. மரத்தை மனுஷங்க உரிக்கிற மாதிரியே உரிச்சி, உள்ளே இருக்கிற தண்டை மட்டும் சாப்பிட்டிட்டு போயி டுச்சுங்க. இப்படி நாலு மரம் மட்டும் சாப்பிட்டிருக்குங்க. பழம் உட்பட எனக்கு ஒரு சேதாரமும் இல்லை. அதேபோல வீட்டு வாசலில் இருக்கும் மாமரத்துக்கு குட்டிகளோட யானை வரும். பழத்தை மட்டும் பறிச்சு குட்டிகளுக்கு ஊட்டும். நாங்க வாசலில் இருந்து வேடிக்கை பார்ப்போம். எங்களை ஒண்ணும் பண்ணதில்லை...” என்கிறார் விவசாயி ரவி கவுண்டர்.

கல்வித் திட்டத்துக்காக மட்டும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக் கான பணம் செலவாகிறது. “ஏன் இப்படி ஒரு திட்டம்?” என்றோம். “நான் படிக்க ஆசைப்பட்ட காலத்துல வசதி இல்லை. செங்கல் சூளைக்கு கூலி வேலைக்கு அனுப்பிட்டாங்க. இன்னைக்கு என் கிராமத்து குழந் தைகள் படிக்கட்டுமே... அதுக்காக என் சொத்து முழுசும் அழிஞ்சாலும் கவலையில்லை” என்கிறார் சுந்தர்ராஜ்.

- பயணம் தொடரும்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்