நிர்வாகி கைதுக்கு கண்டனம்; இந்து மதத்தை அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை: ஸ்டாலினுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்து மதத்தையும், தெய்வங்களையும் அவமதிப்பவர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் நிறுவனர் எஸ். வேதாந்தம், மாநிலத் தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று அவர்கள் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், ஈரோடு கோட்ட செயலாளர் சபரிநாதனை பள்ளிப்பாளையம் போலீஸார் கடந்த 12-ம் தேதி அதிகாலை அவரது வீட்டில் கைது செய்துள்ளனர். காவல் துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவுபடுத்தி பேசும் போக்கு அதிகரித்துள்ளது. திமுகவை சேர்ந்தமுன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான ஆ.ராசா இந்துக்கள்குறித்து இழிவாக பேசினார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில அரசியல் கட்சிகள்கூட இந்துக்களையும், இந்து மதத்தையும் வரம்பில்லாமல், இழிவுபடுத்தும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றன. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் கொடுத்தாலும்,இதுவரை நடவடிக்கை இல்லை.ஆனால், திமுகவினரையோ, அதன்கூட்டணிக் கட்சியினரையோ, பிற மதம் சார்ந்த தலைவர்களையோவிமர்சிப்பவர்கள், புகார் கொடுப்பதற்கு முன்பாகவே கைது செய்யப்படுகிறார்கள்.

ஆனால், இந்து மதத்தை இழிவாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நாமக்கல்லில், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, காவல்துறையிடம் சபரிநாதன் மனு கொடுத்த மறுநாளே, அவர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, சபரிநாதனை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE