மகன், மகள் ‘பாசத்தில்’ வழுக்கி விழுந்துவிடாதீர்கள் - சொத்துகளை எழுதி வைக்கும் பெற்றோருக்கு அறிவுரையாக அமைந்த தீர்ப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

மகனோ, மகளோ பெற்றோரை முறையாக பராமரிக்காவிட்டால், அவர்கள் பெயரில் எழுதி வைத்த சொத்துகளை சட்ட ரீதியாக ரத்து செய்ய பெற்றோருக்கு முழு உரிமை உண்டு என்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா சமீபத்தில் அளித்துள்ளார். எத்தனையோ குடும்பங்களில் வசதியாக வாழ்ந்த பெற்றோர் பலர் ஆதரவைஇழந்து முதியோர் இல்லங்களில் ரத்தக்கண்ணீர் வடித்து வருகின்றனர். ஒருசிலர் சாப்பாட்டுக்கே வழியின்றி யாசகம்பெற்று சாப்பிடும் நிலையையும் காணமுடிகிறது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

அப்படி ஒரு வழக்குதான் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தந்தை, விமானப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி. தாய், செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருவருமே அரசுப் பணியில் இருந்தவர்கள் என்பதால், தங்கள் 2 மகன்களையும் நன்றாகபடிக்கவைத்தனர். நல்ல வேலை, சமூகஅந்தஸ்துடன் பெரிய இடத்தில் திருமணம் என எந்த குறையும் இல்லாமல் அவர்களை ஆளாக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில், தாங்கள் சேர்த்து வைத்த வீடு உள்ளிட்ட சொத்துகளை இரு மகன்கள் பெயரிலும் எழுதி வைக்க நினைத்தனர். இந்த சூழலில், இளைய மகன் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததால் முடிவை மாற்றிக் கொண்டனர். ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசதியாக வாழ்ந்து வரும் மூத்த மகன் பெயருக்கே மொத்த சொத்துகளையும் எழுதி கொடுக்க முடிவெடுத்தனர்.

நன்கு படித்தவர்கள், அனுபவம் மிக்கவர்கள் என்பதால், ‘தங்கள் வாழ்நாள் முழுவதும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ செலவு செய்து தங்களை கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் தனது மூத்த மகனுக்கு கடந்த 2012-ல் செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளனர். அப்போது தாய் பெயரில் ரூ.3 லட்சத்தை மகன் டெபாசிட் செய்துள்ளார். அதன்பிறகு, நிலைமை தலைகீழானது. தந்தையும், தாயும் இருமுறை உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு, உயிர் பிழைப்பதே கடினம் என்ற சூழல் வரை சென்றபோதுகூட ஆஸ்திரேலியாவில் உள்ள மூத்த மகன் என்ன என்று கேட்கவில்லை. வேறு வழி தெரியாமல் தவித்த தாய், ஒரு கட்டத்தில் தனது கணவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தார். சேமித்து வைத்த பணம், நகைகளை விற்று தனது கணவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இறுதி முயற்சியாக கடந்த 2014-ல் மூத்த மகனை தொடர்பு கொண்ட தாயிடம், ‘‘என் வீட்டை எப்போது காலி செய்து கொடுப்பீர்கள்?’’ என்று கேட்டு அதிர்ச்சி கொடுத்தார் மகன்.

நம்மை இவ்வளவு கஷ்டத்தில் ஆழ்த்தி, நம்பிக்கை துரோகம் செய்த மகனுக்கா நம் சொத்தை எழுதி வைக்க வேண்டும்? என்ற சிந்தனை அவர்கள் மனதில் ஏற்பட்டது. மகனுக்கு எழுதிக் கொடுத்த செட்டில்மென்ட் பத்திரத்தை உடனடியாக ரத்து செய்தனர். பெற்றோர் உயிருக்கு போராடியபோது கண்டுகொள்ளாத மகன், பலகோடி மதிப்புள்ள, வாடகை தந்து கொண்டிருக்கும் சொத்து பறிபோனதால் பதறுகிறார். உடனடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு வந்து, 8-வது உதவி பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரித்த நீதிபதி, ‘‘பெற்றோர் சரியான காரியம்தான் செய்துள்ளனர்’’ என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து 3-வது கூடுதல் பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மகன் மேல்முறையீடு செய்ய, அங்கு அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டிதான் பதினாறு அடி பாய வேண்டுமா? இங்கு தாய் பதினாறு அடி பாய்கிறது. அந்த தீர்ப்பை எதிர்த்து பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ‘‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்’’ எனும் திருக்குறளை உவமை காட்டி தனது தீர்ப்பை தொடங்குகிறார். பெற்றோருக்கு இருக்கும் கடமைஉணர்வு, சட்ட ரீதியாக குழந்தைகளுக்கும் உண்டு. ஆனால், பெற்றோரை முதுமையில் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பெரும்பாலான பிள்ளைகள் ஏற்க மறுப்பது வேதனையின் உச்சம். இந்த வழக்கில் மூத்த மகனின் செயல்பாடு இதயமற்றது, ஈவு, இரக்கமற்றது என கடுமையாக விமர்சித்த நீதிபதி, கடந்த 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளின் பெயரில் எழுதி வைக்கப்பட்ட சொத்துகளை சட்ட ரீதியாக ரத்து செய்ய பெற்றோருக்கு முழு உரிமை உண்டு என பல்வேறு வழிகாட்டி தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, பெற்றோர் செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்தது சரியானதே என்று தீர்ப்பளித்தார்.

மேலும், தற்போதைய இளைய சமூகம் பெற்றோரை நோகடிக்க கூடாதுஎன்ற விழுமியத்தின் முக்கியத்துவத்தையும், சமுதாய பொதுப் பண்புகளையும் வேகமாக இழந்து வருவதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில், வயதான பெற்றோருக்காக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இலவசமாக ஆஜராகி வாதிட்டு வெற்றி தேடிக் கொடுத்த முன்னாள் அரசு வழக்கறிஞர் சாரதா விவேக் கூறும்போது, ‘‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் - 2007 பிரிவு 23-ன்படி, அவர்களுக்கான பராமரிப்பு மற்றும் நலன் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தின் படியேறி நியாயம் கேட்ட பெற்றோருக்கு சரியான தீர்ப்பை நீதிபதி பி.டி.ஆஷா கொடுத்துள்ளார். பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு மகனுக்கோ, மகளுக்கோ செட்டில்மென்ட் கொடுக்கும்போது அந்த நிபந்தனைகளை அவர்கள் பூர்த்தி செய்யாவிட்டால், சட்ட ரீதியாக அந்த செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய பெற்றோருக்கு முழு உரிமை உண்டு. இனி தங்களது சொத்துகளை அன்பு மற்றும் பாசத்தின் வெளிப்பாடாக வாரிசுகளுக்கு எழுதி வைக்கும்போது தங்களை கடைசி வரை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் எழுதி கொடுத்தால் அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு இருக்கும். பிள்ளைகளால் எந்த பிரச்சினையும் வராது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE