“கொள்முதல் நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்துக” - முத்தரசன் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவின் வரம்பு 22 சதவீதம் வரை அனுமதிக்கும் வகையில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என மத்திய அரசிடம், தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் 20 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கலாம் என மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதேபோல், உடைந்த, மங்கிய, முளைவிட்ட நெல் பூச்சி அரித்த நெல் போன்றவை கொள்முதல் செய்யும் நெல்லின் மொத்த அளவில் ஏழு சதவீதம் வரை இருக்கலாம் என்று நிபந்தனை விதித்துள்ளது.

நடப்பாண்டில் குறுவை சாகுபடி நல்ல விளைச்சல் கண்டிருப்பதாலும், சம்பா சாகுபடியும் நல்ல விளைச்சல் தரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில், வடகிழக்கு பருவமழை முந்தைய ஆண்டுகளை விட கூடுதல் அளவில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரக்காற்று தொடர்ந்து வீசி வருகிறது.

இந்த இயற்கை சூழலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருப்பதை மத்திய அரசு தாமதமின்றி ஏற்று அனுமதிக்க வேண்டும். இதே அளவில் மற்ற நிபந்தனைகளையும் தளர்த்துவதுடன், விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE