சென்னை: தமிழகம் முழுவதும் 500 இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நேற்று நடைபெற்றது. சென்னையில் நடந்த நிகழ்வில் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என்று விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன.
இதையடுத்து இக்கட்சிகளுடன் இணைந்து 9 கட்சிகள் சார்பில் மனித சங்கிலியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு 17 கட்சிகள், 44 அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 500 இடங்களில் மனித சங்கிலி நேற்று நடைபெற்றது.
சென்னையில் அண்ணாசாலை, சிம்சன் சந்திப்பில் இருந்து ஆயிரம் விளக்கு மசூதி வரை பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சாலையோரம் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றனர்.
பெரியார் சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மனித சங்கிலியில் பங்கேற்றனர்.
பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து, மனித சங்கிலி அணிவகுப்பை பார்வையிட்டபடி ஆயிரம் விளக்கு மசூதி பகுதிக்கு காரில் சென்றனர்.
பின்னர் மனித சங்கிலி குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: தமிழகம் மதவாதத்துக்கு எதிரான மண். தமிழ் மண்ணை காவி மயமாக்க முடியாது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: சாதி, மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி நாசக்கார வேலைகளைச் செய்யும் சக்திகளுக்கு இங்கு இடமில்லை என்பதை மனித சங்கிலி நிரூபித்துக் காட்டியுள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில் சாதியவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இடமில்லை. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக் கூடாது. அவர்களது பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதியை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மதச்சார்பின்மையை தமிழகத்தில் மேலும் வலுப்படுத்துவோம். மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை முறியடிக்கும் வல்லமை மதச்சார்பற்ற கட்சிகளுக்கு உள்ளது.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: வேண்டுகோள் விடுத்தவுடன் தன்னெழுச்சியாக கலந்து கொண்டவர்கள் மூலம் பாஜகவுக்கு எதிரான வெறுப்பு இங்கு வேரூன்றியிருப்பது தெரிகிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை மண் மூடச் செய்வதற்கான எச்சரிக்கைதான் இந்த மனித சங்கிலி.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தமிழகத்தில் நவ.6-ம் தேதி ஆர்எஸ்எஸ்அணிவகுப்பு நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது. பள்ளிகளிலும் ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்க அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால் எதிர் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ளும் நிலை ஏற்படும்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: தமிழகத்தில் மதவாத இயக்கங்களுக்கு அனுமதியில்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago