பெண் வழக்கறிஞர் வீடு தாக்கப்பட்ட வழக்கு: சசிகலா புஷ்பா கைதுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

By கி.மகாராஜன்

பாலியல் புகார் அளித்த இளம் பெண்களுக்கு ஆதரவாக ஆஜராகும் பெண் வழக்கறிஞர் வீடு தாக்கப்பட்ட வழக்கில் சசிகலா புஷ்பா எம்பி, அரவது கணவர், மகன் ஆகியோரை கைது செய்ய தடை விதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நெல்லை மாவட்டம் திசையன் விளை அருகே உள்ள ஆணை குடியைச் சேர்ந்த பணிப்பெண்கள் இருவர் பாலியல் புகார் அளித்த னர். இந்த வழக்கில் பணிப் பெண்களுக்கு ஆதரவாக திசையன்விளை பெண் வழக்கறிஞர் சுகந்தி ஜெய்சன் ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில் சுகந்தி ஜெய்சன் வீட்டின் மீது செப். 11-ம் தேதி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக திசையன்விளை போலீஸார் வழக்கு பதிவு செய்து சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரி, ராமலிங்கம், சித்ராகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் எல்.பிரதீப்ராஜா ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், இந்த வழக்கில் கைதான மூவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எங்களை வழக்கில் சேர்க்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர் வழக்கறிஞர் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனனக் கூறப்பட்டிருந்தது.

இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஹரிநாடார், ராமலிங்கம், சித்ராகுமார் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் சுகந்தி ஜெய்சன் சார்பில் சசிகலா புஷ்பா உள்ளிட்ட 3 பேருக்கு முன்ஜாமீன் வழங்கவும், ஹரிநாடார் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்கவும் ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

கூடுதல் அட்வகேட் ஜெரனல் வாதிடும்போது, ராக்கெட் ராஜா தூண்டுதல் பேரில் வழக்கறிஞர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனுதாரர் தரப்பு ஆவணங்கள் அரசு தரப்புக்கு வழங்கவில்லை. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மனுத் தாக்கல் செய்யவுள்ளோம். இதனால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர், அரசு தரப்புக்கு ஆவணங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரம் உள்ளது. இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகிறது. ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும் போது ஒருவரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். அரசு தரப்பில் விசாரணையை வேண்டும் என்றே தாமதம் செய்யப்படுகிறது என்றார்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு ஏற்கெனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தரப்பில் அரசு தரப்புக்கு ஆவணம் வழங்கப்பட்டதற்கு அத்தாட்சி உள்ளது. இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றம், மனுதாரர் தரப்பு, புகார்தாரர் தரப்பில் தயாராக இருக்கும் நிலையில், அரசு தரப்பில் மட்டும் கால அவகாசம் கோரப்படுகிறது என்றார். பின்னர் விசாரணையை நவ. 9ம் தேதி மதியம் 2.15 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அப்போது அதுவரை சசிகலா புஷ்பா உள்ளிட்டோரை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்க மறுத்த நீதிபதி, 2 நாளில் ஒன்றும் நடைபெறாது. நவ. 9ம் தேதியும் வழக்கை ஒத்திவைக்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டால், மனுதாரர்களை கைது செய்ய தடை விதிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்