திருமாவளவன் சிந்தனை பிற்போக்காக மாறிவிட்டது: இயக்குநர் பேரரசு கருத்து

By செய்திப்பிரிவு

வைணவம், சைவம் என்ற விஷயங்களை மறந்து, மக்கள் இந்துஎன்ற ஒற்றுமைக்குள் வந்துவிட்டார்கள் என திரைப்பட இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர், திருமாவளவன் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் பேசும்போது, இந்து சமய அறநிலையத் துறையை, சைவ சமய அறநிலையத்துறை என்றும் வைணவ சமய அறநிலையத்துறை என்றும் பிரிக்க வேண்டும் எனக் கூறினார். இதற்கு திரைப்பட இயக்குநர் பேரரசு பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருமாவளவன் சொல்வதுபோல இந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்துவிட்டு, தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள். மீண்டும் தெரு பெயர்களோடு சாதிப் பெயரையும் இணையுங்கள். சைவ, வைணவ காலத்தில் கிறிஸ்தவம், இஸ்லாம் இல்லை. அதனால், அந்த மதங்களை இந்தியாவில் இருந்து அகற்றி விடுங்கள்.

முக்கியமாக அப்போது திராவிடம் என்ற வார்த்தையே தமிழர்களிடம் இல்லை. அதனால்முதலில் அந்த வார்த்தையை எங்குமில்லாமல் செய்துவிடுங்கள். இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைத்து விடுங்கள். திருமாவளவன் சொல்வதுபோல நாம், 2000 ஆண்டுகளுக்கு முன் சென்றுவிடுவோம்.

வைணவம், சைவம் என்ற விஷயங்களை மக்களே மறந்து, இந்து என்ற ஒற்றுமைக்குள் வந்துவிட்டார்கள். சாதி ஒழிய வேண்டும், சமூக நீதி வேண்டும் என்றுமுற்போக்காக பேசும் திருமாவளவனின் சிந்தனை அதைவிட பிற்போக்காக இப்போது மாறிவிட்டது.

திருமாவளவனிடம் நேரடியாகவே கேட்கிறேன். நீங்கள் இந்துவா? இல்லை என்றால் கிறிஸ்தவரா? இல்லை, எனக்கு எந்தமதமும் இல்லை, நான் நாத்திகர்என்றால் அதையும் வெளிப்படையாகச் சொல்லுங்கள். பிறகு இந்து மதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதும், கேலி கிண்டல் செய்வதும் இருக்கட்டும்.

ஆ.ராசா, சீமானுக்கு கேள்வி

ஆ.ராசா, சீமான் ஆகியோரிடமும் இதையே கேட்கிறேன். நீங்கள் என்ன மதம் என்று தெரியாமல் இந்து மதத்தை இழிவுப்படுத்தக் கூடாது. இதுவரை பொறுத்துக் கொண்டோம். இனி பொறுக்க மாட்டோம். இவ்வாறு பேரரசு கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE