சென்னை: திராவிடத்தை தமிழ் என சுருக்கிவிட்டனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும் திட்டத்தின் கீழ் 2 நாள் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன், ஆளுநரின் முதன்மை செயலாளர் ஆனந்த்ராவ் வி.பாட்டில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது, அவர் பேசியதாவது: இந்தியாவை ஆட்சி செய்த ஆட்சியர்களும், மன்னர்களும் தருமத்துக்கு கட்டுப்பட்டு ஆட்சி நடத்தினர். பலரும் பக்தி மார்க்கத்தின் வழி நின்று அதனைப் பரப்பினர். நாட்டின் விடுதலையில் பல்வேறு தரப்பினரும் கவனம் செலுத்தினர். பாரதியார் தனது மிகச்சிறந்த பங்களிப்புகளை நாட்டின் விடுதலைக்காக வழங்கினார்.
அன்றைய காலகட்டங்களில் பல்வேறு சம்பவங்களே நமது தலைவர்களை சுதந்திர போராட்டக் களத்துக்குள் இழுத்து சென்றது. வங்கப் பிரிவினை, ஜாலியன் வாலா பாக் சம்பவம் போன்றவையே வ.உ.சிதம்பரனார், காமராஜர் போன்றோர் நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளத் தூண்டியது. ஆன்மிக கலாச்சாரமே நமது நாட்டின் ஒட்டுமொத்த ஆன்மாவாக விளங்குகிறது. கடந்த காலங்களில் காலனிய சக்திகள் நமது கலாச்சார அடையாளங்களை அழிக்க முனைந்தன. பழைய புனைவுகளை சொல்லி அழிக்கப் பார்த்தனர். நாட்டின் விடுதலைக்குப் பிறகு பாரத தேசத்தை புரிந்து கொள்ளும் தன்மையை அரசமைப்பு சட்ட வகைக்குள் மட்டுமே சுருக்கி விட்டனர். 5 மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடத்தை தமிழ் என்று சுருக்கிவிட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.