தஞ்சாவூர் பெரிய கோயிலில் பழமை மாறாமல் அகழி கோட்டை சுவர் சீரமைப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிதிலமடைந்து காணப்பட்ட ‘அகழி கோட்டை சுவரும், கொத்தளமும்’ பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் கல்வெட்டுகளும், சிற்பங்களும் உலக அளவில் புகழ்பெற்று விளங்கியதால், யுனெஸ்கோ அமைப்பு, இக்கோயிலை உலக மரபுச் சின்னங்களின் பட்டியலில் இணைத்து பராமரித்து வருகிறது. இதனால் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது பெரிய கோயில்.

சோழர்களின் கட்டிடக் கலைக்கு நிகராக மராட்டியர் காலத்திலும், தஞ்சாவூர் பெரிய கோயிலில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில், அகழி கோட்டை மதில் சுவர், கோட்டை கொத்தளம் எனும் கட்டுமானங்களுடன் சிறிய கோட்டையின் அரணாக மராட்டா கோபுரம் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரண்கள் செம்பூரான் கற்களாலும், சுண்ணாம்பு கலவையாலும் இணைத்துக் கட்டப்பட்டுள்ளன.

இந்த அகழி, கோட்டை கோயிலை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் தெற்கு பகுதியில் கல்லணைக் கால்வாய் எனப்படும் புதுஆறு வெட்டப்பட்டபோது, 1935-ம் ஆண்டு அகழி இணைக்கப்பட்டது.

மீதமுள்ள கிழக்கு, வடக்கு, மேற்கு பகுதியில் மட்டும் இந்த கோட்டை மதில் சுவர்கள் கோயிலுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளன.

இந்நிலையில் கோயில் முன்புற கோட்டை சுவரில் விரிசல்கள் ஏற்பட்டதால், இவற்றை சீரமைக்க இந்திய தொல்லியல் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி பழமை மாறாமல், சுண்ணாம்பு கலவை, கடுக்காய், வெல்லம் ஆகியவை கொண்ட கலவை மூலம் சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறையின் முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் கூறியதாவது: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகளுக்காக இந்திய தொல்லியல் துறை நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் கோட்டை அகழிச்சுவர் சீரமைக்கப்படுகிறது. மராட்டியர் காலத்தில் கட்டப்பட்ட இந்தச் சுவரை, தற்போது பழமை மாறாமல் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவடையும்.

கோயிலின் முகப்பு பகுதியில் ஆங்காங்கே உடைந்த நிலையில் இருந்ததால், இந்த சீரமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE