கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்புச் சுவர் அமைக்க நிதி ஒதுக்குக: ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி - திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவர் அமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், ''கடலூர் - மயிலாடுதுறை மாவட்டங்களில் நிலத்தடி நீர்வளத்தை பாதுகாப்பது, கடல் நீர் உள் புகுவதை தடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்கு தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை தமிழகத்தின் முதல்வராகிய தங்களுக்கு எழுதுகிறேன். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடிக்கும், கடலூர் மாவட்டம் திருக்கழிப்பாலைக்கும் இடையே கடைமடை கட்டமைப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி 2017-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி கொள்ளிடம் நகரத்தில் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கடந்த 30.05.2022 அன்று தங்களை முதல்வரின் முகாம் அலுவலகத்தில் வாழ்த்து பெறுவதற்காக சந்தித்த போது, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டுவது உள்ளிட்ட நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதையேற்ற நீங்கள், கொள்ளிடம் தடுப்பணைகள் குறித்து ஆய்வு செய்து ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டீர்கள். அதன்படி கடந்த 17.06.2022 அன்று மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடிக்கு நேரடியாகச் சென்று கடைமடைக் கட்டமைப்புச் சுவர் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்தேன். அதற்கு நீர்வளத்துறை பொறியாளர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அளக்குடி- திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவர் பணிகளை உடனடியாக தொடங்கி விரைவாக முடிக்க வேண்டும் என்பதுதான் அப்பகுதியில் நான் சந்தித்து பேசிய பொதுமக்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.

அளக்குடி பகுதியில் ஆய்வு நடத்திய பிறகு அளக்குடி - திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்பு சுவர் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்; அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரி கடந்த ஜூன் 26-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், அதன்பின் 100 நாட்களுக்கு மேலாகியும் இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாதது வருத்தமளிக்கிறது.

கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி - திருக்கழிப்பாலை இடையே கடைமடை கட்டமைப்புச் சுவர் கட்ட வேண்டியது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய, தவிர்க்க முடியாத பணி ஆகும். கொள்ளிடம் ஆற்றிலிருந்து அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் அளக்குடியில் தொடங்கி 22 கிலோ மீட்டர் அளவுக்கு கடல் நீர் உள்நுழைந்திருக்கிறது. சந்தப்படுகை, திட்டுப்படுகை, அனுமந்தபுரம், முதலைமேடு உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது. இதனால், குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். மேலும், இப்பகுதிகளில் உள்ள 10,000 ஏக்கர் விளைநிலங்கள் உவர் நிலங்களாக மாறி விட்டன. இதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்வதையே முற்றிலுமாக நிறுத்தி விட்டனர்.

இத்தகைய சூழலில் இனியும் தாமதிக்காமல் அளக்குடி - திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவரை உடனடியாக அமைத்தால் தான் இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் வீணாவதை தடுக்க முடியும். அதேநேரத்தில் இந்த கடைமடை கட்டமைப்புச் சுவரை விரைந்து கட்டி முடிக்கும்பட்சத்தில், அங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்த முடியும்; உப்புத்தன்மை கொண்டதாக மாறிய நிலங்களை மீண்டும் விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களாக மீட்டெடுக்க முடியும். அதுமட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் சிக்கலையும் தீர்க்க முடியும். நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் அந்த பகுதிகளில் விவசாய மறுமலர்ச்சியும் ஏற்படும்.

வங்கக்கடலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அளக்குடி பகுதியில் கடைமடை கட்டமைப்பு கட்டுவதற்கு ரூ.540 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கடைமடை கட்டமைப்புச் சுவர் கட்டி முடிக்கப் பட்டால், அதில் 0.366 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்தத் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளுக்காக ரூ.94.52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மண் பரிசோதனை மற்றும் பிற ஆய்வுப் பணிகளும் நிறைவடைந்து விட்டன. இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நீர்வளத்துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறேன். இந்த பணிகள் முடிவடைந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற்று கடைமடை கட்டமைப்புச் சுவரை கட்டும் பணிகளை தொடங்க முடியும்.

அளக்குடி - திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவர் பணிகளை விரைவுபடுத்துவதற்காக புதிய காரணங்களும் உருவாகியிருக்கின்றன. கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றின் கான்கிரீட் தடுப்பு சுவரில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. கடந்த ஜூலை மாதம் கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்ட போதும் அளக்குடியில் கரை உடைப்பு ஏற்படும் சூழல் உருவானது. அங்கு மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டதால் அப்பகுதியில் உடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டில் சேதமடைந்த கான்கிரீட் சுவர் மீண்டும் கட்டப்படாத நிலையில், அதை கட்டுவதுடன் கடைமடை கட்டமைப்பு சுவர் கட்டும் பணிகளையும் விரைந்து தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி அளக்குடி சென்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ''கொள்ளிடம் ஆற்றில் அளக்குடியில் நிரந்தர கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கவும், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீரை தேக்குவதற்காக தடுப்பணை மற்றும் கதவணை அமைக்கவும் முதல்வரிடம் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்கபடும்'' என தெரிவித்தார். இது குறித்த அமைச்சரின் அறிக்கை தங்களின் பார்வைக்கு வந்திருக்கக் கூடும் என்று நம்புகிறேன். அதேபோல், கடைமடை கட்டமைப்பு சுவர் அமைப்பதற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பொதுப்பணித்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அளக்குடி - திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவர் அமைப்பதற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதை இனியும் தாமதிப்பதற்கு எந்த காரணமும் இல்லை. இத்திட்டத்தை செயல்படுத்தினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் மறுமலர்ச்சி பெறும். இவற்றை கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன், வரும் 17-ஆம் தேதி தொடங்கும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள துணை நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று அந்தக் கடிதத்தில் அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்