நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு உதவுவதுபோல் நடித்து ரூ.1 லட்சம் பணம் மோசடி செய்த இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: திரைப்பட நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு உதவுவதுபோல் நடித்து ரூ.1 லட்சம் மோசடி செய்த இளைஞரை போரூர் போலீஸார் கைது செய்தனர். பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி (59). இவர், சென்னை போரூர், அய்யப்பன்தாங்கல் விஜிஎன் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சினிமா துறையைச் சேர்ந்த சிலர் பண உதவி செய்தனர்.

போண்டா மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பலரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது அவரது தீவிர ரசிகர் என்று கூறி, திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ் (34) என்பவரும் சென்றார். அவர், உடல் நலம் விசாரிப்பது போல உடன் பழகினார். பின்னர், மருத்துவமனையில் போண்டா மணிக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்துள்ளார். இதனால், போண்டா மணியின் குடும்பத்தினரிடம் ராஜேஷ் நன்மதிப்பைப் பெற்றார்.

இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து போண்டா மணி வீடு திரும்பினார். அவருடன் ராஜேஷ் பிரித்தீவ்வும் சென்றார். அப்போது போண்டா மணியின் மனைவி மாதவி, தனது கணவரின் ஏடிஎம் கார்டை ராஜேஷ் பிரித்தீவ்விடம் கொடுத்து மருந்து வாங்கி வருமாறு அனுப்பி வைத்துள்ளார்.

தலைமறைவானர்: ராஜேஷ் பிரித்தீவ் ஏடிஎம் கார்டை பெற்றுச் சென்ற சிறிது நேரத்தில், சென்னையில் உள்ள பிரபலமான நகைக்கடை ஒன்றிலிருந்து மாதவியின் செல்போனுக்கு ரூ.1,04,941 மதிப்புள்ள நகை வாங்கியதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாதவி, உடனடியாக ராஜேஷ் பிரத்தீவ்வை போனில் தொடர்பு கொண்டார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை; அப்படியே தலைமறைவாகிவிட்டார்.

பல வழக்குகளில் தொடர்புள்ளவர்: தாம், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாதவி, இதுகுறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், தலைமறைவான ராஜேஷ் பிரத்தீவை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தினேஷ், சிவராமகுரு, தீனதயாளன், ராஜேஷ், பெருமாள் என பல்வேறு பெயர்களில் பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டிருப்பதும், அவர் மீது கோயமுத்தூர், சென்னை உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் ராஜேஷ் பிரத்தீவ்வை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்