வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கும் - தமிழகத்தில் 2 நாள் கனமழை வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், தெற்கு ஆந்திரா அருகே நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் (அக். 7, 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அக்டோபர் இறுதியில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:

கணினி மாதிரி கணிப்பின் அடிப்படையில், நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு தென்னிந்திய அளவில் வடகிழக்குப் பருவமழை வழக்கமான அளவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய தலைமை அறிவித்துள்ளது.

தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அக்டோபர் 7, 8, 9-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக். 7-ம் தேதி (இன்று) சேலம், வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, அக். 8-ம் தேதி (நாளை) சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக். 10-ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படு கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மீட்புப் படை தயார்

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர், மாநில நிவாரண ஆணையர், வருவாய்த் துறைச் செயலர் தலைமையில், கடந்த 3-ம் தேதி காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில், பேரிடர் தாக்கத்தைக் குறைத்தல், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் கூடுதல் அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. 1070 இலவச தொலைபேசி மூலம் மக்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. 94458 69848 என்ற வாட்ஸ்-அப் எண் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம்.

மாநிலத்தில் 1,51,050 முதல்நிலை மீட்பர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரம் முதல்நிலை மீட்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் தாக்கத்துக்கு உள்ளாகும் 16 மாவட்டங்களில், ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் 5,500 தன்னார்வர்களுக்கு தேடுதல், மீட்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்களும், தமிழக பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

இதேபோல, தீயணைப்பு, வருவாய், மின்சாரம், சுகாதாரம், பொதுவிநியோகம் உள்ளிட்ட துறையினரும், பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக உள்ளனர். கடலோர மாவட்டங்களில் பாதிக்கப்படும் மக்களுக்காக 1.13 லட்சம் பேரைத் தங்க வைக்கும் வகையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், இதர மாவட்டங்களில் 4,973 பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள், மீட்புப் பணிகளுக்காக 2,897 பொக்லைன் இயந்திரங்கள், 2,115 ஜெனரேட்டர்கள், 483 நீர் இறைப்பான்கள், 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 5,900 கட்டுமரங்கள், 48,100 மோட்டார் படகுகள், 5,800 இயந்திரப் படகுகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 secs ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்