திருப்பூர்: குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்ட 3 சிறுவர்கள் மரணம்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூரில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் கெட்டுப்போன உணவை உட்கொண்ட 3 சிறுவர்கள் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் ஆதரவு எற்போர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதை செந்தில்நாதன் என்பவர் நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தக் காப்பகத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் அம்மாபாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு தினந்தோறும் உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு இவர்களுக்கு ரசம் சாதம் இரவு உணவாக வழங்கப்பட்டுள்ளது. அதை சாப்பிட்ட 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பணியில் இருந்த வார்டன் ஒரு சில சிறுவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற நான்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் அதில் இருந்த மருத்துவர்கள், சிறுவர்களின் நிலையை கண்காணித்து உடனடியாக சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். காப்பகத்தில் குழந்தைகளை மருத்துவர்கள் பரிசோதிக்கும்போது அங்கு மாதேஷ் மற்றும் அத்திஸ் ஆகிய இரண்டு சிறுவர்கள் ஏற்கெனவே இறந்து இருப்பது தெரியவந்தது. மேலும், கவலைக்கிடமாக இருந்த பாபு என்ற சிறுவனும், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

காப்பகத்தில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட 9 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்பொழுது அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் நேரில் பார்வையிட்டு சிகிச்சை விபரங்கள் குறித்து மருத்துவர்கள் இடம் கேட்டறிந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE