மருந்துகளுக்கு க்யூஆர் கோடு: போலி, தரமற்றதை தடுக்க மத்திய அரசு திட்டம் 

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியா முழுவதும் அலோபதி மருத்துவ முறையில் (ஆங்கில மருத்துவம்) அதிக அளவிலான மாத்திரை, மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. சில நிறுவனங்கள் போலி மற்றும் தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்கின்றன. காலாவதியான மருந்துகளும் சிலரால் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து காய்ச்சல், இதய நோய், வயிற்று வலி, தைராய்டு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கான போலி மற்றும் தரமற்ற மருந்துகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து வருகிறது. காலாவதியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படகின்றன. ஆனாலும், போலிகளை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், அதிகம் விற்பனையாகும், முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளில் போலி மற்றும் தரமற்றவற்றை தடுக்கும் வகையில் ‘டிராக் அண்டு டிரேஸ்’ என்ற புதிய தொழில்நுட்பட்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருள்களின் லேபிள்கள் மீது பார்கோடு அல்லது க்யூஆர் கோடு பிரிண்ட் செய்யப்படவுள்ளது. மருந்து மற்றும் மாத்திரையின் முதல் டேபிளில் இந்த பிரிண்ட் செய்யப்படும். அதிகம் விற்பனையாகும் நோய் எதிர்ப்பு மருந்துகள், இதய நோய், வலி நிவாரணி மாத்திரை, அலர்ஜிக்கான மாத்திரை அட்டையின் விலை ரூ.100-க்கு மேல் இருக்கும் மருந்துகளுக்கு இந்த வசதி அறிமுகமாகவுள்ளது.

இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் மருந்தின் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, விலை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெறும் வகையில் நடைமுறைப்
படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், போலி, தரமற்ற, காலாவதியான மருந்துகளை தடுக்க முடியும். அதேநேரம் இந்த கூடுதல் வசதியை செய்வதால் மருந்து நிறுவனங்கள் விலையை 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE